உள்ளூர் செய்திகள்

/ ஸ்பெஷல் / பானுவாசர ஸ்பெஷல் / 220 கி.மீ., துாரம் தாயை தோளில் சுமந்து சென்ற மகன்

220 கி.மீ., துாரம் தாயை தோளில் சுமந்து சென்ற மகன்

இன்றைய காலத்தில் பிள்ளைகள் பலரும் தங்கள் தாய், தந்தையரை முதியோர் ஆசிரமத்தில் விட்டுச் செல்வதாக பல செய்திகளை தினமும் வாசிக்கிறோம். இப்படிப்பட்ட காலத்திலும், தாய், தந்தையை கடவுளாக நினைத்து வாழ்பவர்களும் இருக்கின்றனர். அப்படி மன நெகிழ்ச்சியை ஏற்படுத்துபவர் தான், இக்கட்டுரையின் நாயகன். பெலகாவி மாவட்டம், ராய்பாக் தாலுகாவில் கெம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் சதாசிவ லக் ஷ்மன் பனே, 55. இவர் ஆன்மிகத்தில் அதீத ஈடுபாடு உடையவர். இதனால், பல நற்பண்புகளுக்கு சொந்தக்காரராகவும் இருக்கிறார். இவர், மஹாராஷ்டிரா மாநிலம், பந்தர்பூரில் உள்ள ஸ்ரீ விட்டல் ருக்மணி கோவிலுக்கு ஆண்டுக்கு ஒரு முறையாவது, புனித யாத்திரை செல்வதை வழக்கமாக வைத்துள்ளார். புனித யாத்திரை இந்த கோவில், மஹாராஷ்டிராவில் உள்ள முக்கியமான கோவில்களில் ஒன்றாகும். பல மாநிலங்களில் இருந்தும் தினமும் பக்தர்கள் வருவதால், ஒரு நாளைக்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். இப்படிப்பட்ட சிறப்பு வாய்ந்த புனித தலத்திற்கு, 15 ஆண்டுகளாக யாத்திரை மேற்கொண்டு வருகிறார். இந்த புனித யாத்திரைக்கு தன் தாயையும் அழைத்துச் செல்ல வேண்டும் என விருப்பப்பட்டார். ஆனால், அவரது தாய் சட்டெவ்வா லக் ஷ்மன் பனேவுக்கு 100 வயது ஆகிறது. அவரால் நீண்ட துாரம் நடக்க முடியாது. என்ன செய்யலாம் என சதாசிவ லக் ஷ்மன் யோசித்தார். தோளில் சுமந்து அச்சமயம், தன் தாயை தோள் மீது சுமந்து கொண்டே கோவிலுக்கு செல்லலாம் என நினைத்தார். அவரது வீட்டில் பலரும் எதிர்ப்புத் தெரிவித்தனர். இதையெல்லாம், அவர் பெரிதாக காதில் போட்டுக்கொள்ளவில்லை. தன் தாயை தோளில் அமர வைத்து, பெலகாவியிலிருந்து மஹாராஷ்டிராவில் உள்ள கோவில் வரை, 220 கி.மீ., பயணத்தை சில நாட்களுக்கு முன்பு துவங்கினார். செல்லும் வழியில் காலநிலை, உணவு, உடை மாற்றுவது, காலைக்கடன் என பல சிரமங்களை தாங்கிக் கொண்டு பயணத்தை தொடர்ந்தார். தாயை தோளில் சுமந்து செல்லும், அவரை பார்த்த வாகன ஓட்டிகள் பலரும் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர். 9 நாட்கள் பயணம் ஒரு வழியாக ஒன்பது நாட்கள் பயணம் செய்து, தன் தாயை பந்தர்பூருக்கு அழைத்துச் சென்றார். அங்குள்ள புனித நதியான சந்திரபகா நதியில் தன் தாயை குளிக்க வைத்தார். இதை உள்ளூர் மக்கள், கோவில் நிர்வாகிகள் என, அனைவரும் மனமார பாராட்டினர். அவரது தாய் சட்டெவ்வா கூறுகையில், ''என் மகன், அவனது தோளில் உட்கார வைத்து, விட்டலா கோவிலுக்கு அழைத்துச் சென்றான். இதன் மூலம் என் வாழ்க்கை புனிதமாகி உள்ளது. இது எனது வாழ்வில் மறக்க முடியாத தருணம். எனது மகன் ஆயுள் உள்ள வரை நன்றாக இருப்பான்,'' என்றார். இச்சம்பவம் தாய் - மகன் இடையேயான உன்னதமான உறவை காட்டுகிறது. காலங்கள் மாறினாலும், தாய் மீது மகன் கொண்ட அன்பும், மகன் மீது தாய் காட்டும் பாசமும் மாறப்போவதில்லை என்பதை, இதுபோன்ற நிகழ்வுகள் நமக்கு எடுத்துக் காட்டுகின்றன. - நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை