உள்ளூர் செய்திகள்

/ ஸ்பெஷல் / பானுவாசர ஸ்பெஷல் /  கால் விரல்களை பார்த்தே ஆளை கண்டுபிடிக்கும் மாணவர்

 கால் விரல்களை பார்த்தே ஆளை கண்டுபிடிக்கும் மாணவர்

- நமது நிருபர் -: முகம், குரல், உடலை பார்த்து ஒருவரின் பெயரை அடையாளம் காண்பது எளிது. ஆனால், 10ம் வகுப்பு மாணவர் ஒருவர், ஒருவரின் கால் விரல்களை பார்த்தே, எதிரில் நிற்பது யார் என்பதை சரியாக கண்டுபிடித்து விடுகிறார். ஷிவமொக்கா மாவட்டம் மங்கர்சிகொப்பாவை சேர்ந்தவர் புவன். இவர், ஹொசநகரில் உள்ள கெருபுராவில் இந்திரா குடியிருப்பு பள்ளியில், 10ம் வகுப்பு படித்து வருகிறார். புவன் ஒரு திசையை நோக்கி, தன் இரண்டு கால்களைம் சிறிது விரித்து நிற்கிறார். மற்றொரு மாணவர், புவனின் பின்னால் நின்றபடி அவரின் காலுக்கு இடையே தனது காலை நீட்டுகிறார். அந்த மாணவரின் கால் விரல்களை பார்த்தே, அவரின் பெயரை சரியாக கூறிவிடுகிறார் புவன். இப்படி ஒரு மாணவருக்கு மட்டுமல்ல, பள்ளியில் படிக்கும் அனைத்து மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் கால் விரல்களை மட்டும் பார்த்தே, அவர்களின் பெயரை சரியாக சொல்லி விடுகிறார். இதுகுறித்து புவன் கூறியதாவது: நான் எப்போதும், ஆசிரியர்களிடம் பேசும் போது, என் தலையை குனிந்தபடி நின்றிருப்பேன். இவ்வாறு அடிக்கடி அவர்களின் கால்களை பார்ப்பேன். இதுவே, எனக்கு பழக்கமாகி விட்டது. நாளடைவில் கால்களை பார்த்தே, அது யார் என்று கூறி வந்தேன். ஒரு நாள் இதை பார்த்த ஆசிரியர் ஆச்சரியப்பட்டார். என்னை ஊக்கப்படுத்தினார். ஒருவருக்கு இருக்கும் கால்கள் போன்று, மற்றொருவருக்கு இருக்காது. ஒவ்வொரு கால்களும் தனித்துவமானவை. நான் அவர்களின் கால் விரல்களை வைத்தே அடையாளம் காண்கிறேன். எதிர்காலத்தில் பொறியாளராக வேண்டும் என்று விரும்புகிறேன். இவ்வாறு அவர் கூறினார். மற்ற மாணவர்கள் கூறியதாவது: புவனின் ஞாபக சக்தி, எங்களை வியப்பில் ஆழ்த்தி உள்ளது. முன்னதாக எங்கள் ஆசிரியர்கள், குரல் மூலம் அவர்களின் பெயர்களை கண்டுபிடிக்கும் பணியை எங்களுக்கு வழங்கினார். புவன், 200க்கும் மேற்பட்ட குரல்களை சரியாக யூகித்து கூறினார். இது, அவருக்கே ஆச்சரியமாக இருந்தது. தனக்கு திறமை உள்ளது என்பதை உணர்ந்தார். இதை சோதிக்க நினைத்தோம். மாணவர்கள் நாங்கள் அனைவரும், அவரின் பின்னால் ஒவ்வொருவராக நின்று, அவரின் இரு கால்களுக்கு இடையே எங்கள் கால்களை நீட்டினோம். கால்களை பார்த்தே, எங்களின் பெயர் என்ன என்பதை சரியாக கூறியது ஆச்சரியமாக இருந்தது. கடவுள் அனைவருக்கும் ஒரு திறமையை கொடுக்கிறார். அதுபோல புவனுக்கும் ஒரு சிறப்பு திறமை உள்ளது. அவர் யாருடனும் சண்டை போடுவதில்லை. இவ்வாறு அவர்கள் கூறினர். பள்ளியின் பெற்றோர் மன்ற தலைவர் கிருஷ்ணமூர்த்தி கூறுகையில், ''புவனின் திறமையை கண்டு நாங்களே வியப்படைந்து உள்ளோம். கால்களை பார்த்தே பெயரை கூறுவது ஆச்சரியமாக உள்ளது. நம்மால், 10 - 15 பேரின் கால்களை மட்டுமே ஞாபகம் வைத்திருக்க முடியும். புவன், 100 முதல் 200 பேரை சரியாக அடையாளம் கண்டு, பெயரை சொல்வது ஆச்சரியமாக உள்ளது,'' என்றார். புவனின் தாயார் ஹேமாவதி கூறுகையில், ''புவன் ஆரம்பத்தில் இருந்தே புத்திசாலி சிறுவனாக இருந்தான். எங்கள் கிராமத்து பள்ளியில் படிக்கும் போது, ஒவ்வொரு முறையும் வகுப்பில் முதலாவதாக வருவான். ' 'படிப்பில் மட்டுமல்ல, மற்ற செயல்களிலும் அவன் முன்னணியில் இருந்தான். அதுபோன்று, பள்ளியில் ஆசிரியர்கள் அவனை நிறைய ஊக்குவித்தனர். இப்போது அவன், கால் விரல்களை பார்த்து பெ யரை சொல்ல முடிகிறது என்பதில் எங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை