விவசாயம், ஓவியத்தில் அசத்தும் வெங்கடாச்சல்
முயற்சி செய்தால் முடியாதது என்று ஒன்றுமே இல்லை. முயற்சிதான் வெற்றிக்கு வழி. இதன் உண்மையை உணர்ந்த இன்றைய கால இளைஞர்கள் ஏதாவது ஒரு வழியில் முயற்சி செய்து சாதிக்க வேண்டும் என்று நினைக்கின்றனர். இவர்களில் ஒருவர் தான், வெங்கடாச்சல், 30.கர்நாடகாவின் கடலோர மாவட்டமான உத்தர கன்னடா சிர்சி அருகே பெங்காவ்ன் கிராமத்தைச் சேர்ந்தவர். ஓவிய படிப்பில் முதுகலை பட்டம் பெற்றவர். தேனீ வளர்ப்பு
இவர் 4 ஏக்கர் விவசாய நிலத்தில் பாக்கு, மிளகு, கிராம்பு, வாழை, காபி உள்ளிட்டவை பயிரிட்டு முழுநேர விவசாயியாக மாறியுள்ளார். அதனுடன் பால் பண்ணை, தேனீ வளர்ப்பிலும் ஈடுபட்டு உள்ளார்.இதுகுறித்து வெங்கடாச்சல் கூறியதாவது:ஓவிய படிப்பில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். வேலை தேடி பெரிய நகரங்களுக்கு செல்ல வேண்டும் என்ற நினைப்பு தோன்றும்போது, நமது மூதாதையர்கள் நிலம் அனாதையாகிவிடும் என்ற எண்ணம் எனக்கு ஏற்படும்.இதனால் மூதாதையர்கள் நினைவாக அவர்களது நிலத்தில் விவசாயம் செய்ய முடிவு செய்து விவசாயம் பக்கம் திரும்பினேன்.எப்போதும் ஒரே ஒரு பயிரை மட்டும் நம்பி விவசாயத்தில் ஈடுபடக்கூடாது. அது கண்டிப்பாக நிச்சயமற்ற தன்மையை உருவாக்கும். இதனால் பல வகையான பயிர்களை பயிரிட்டு வளர்ப்பது அவசியம். தற்போது விவசாய பணிகள் பால்பண்ணை, தேனீக்கள் வளர்ப்பின் மூலம் ஆண்டிற்கு எனது வருமானம் 6 லட்சம் ரூபாய். ஊற்று நீர்
விவசாய நிலத்தில் பணிகளை நானே மேற்கொள்கிறேன். அறுவடை போன்ற முக்கிய பணிகளுக்கு மட்டும் தொழிலாளர்களை வேலைக்கு அழைத்து வருகிறேன். மலைப்பாங்கான பகுதிகளில் இருந்து கிடைக்கும் ஊற்று நீர் பயன்படுத்தி விவசாயம் செய்கிறேன்.விவசாயத்தில் ரசாயனங்களை பயன்படுத்துவது இயற்கைக்கு தீங்கு விளைவிக்கும் என்று முழுமையாக நம்புகிறேன். இதனால் ரசாயனத்திற்கு பதிலாக கால்நடைகளின் சாணங்களை பயன்படுத்தி உரங்களை தயாரிக்கிறேன். எங்கள் வீட்டிற்கு தேவையான காய்கறிகளை எனது தோட்டத்திலிருந்து எடுத்துக் கொள்கிறேன்.ஆன்லைன் வழியாக 15 க்கும் மேற்பட்ட நாடுகளை சேர்ந்த 62 பேருக்கு ஓவியம் வரையவும் கற்றுக் கொடுத்து வருகிறேன். எனது மாவட்டத்தில் மட்டும் 80 பேருக்கு ஓவிய பயிற்சி அளிக்கிறேன். தன்னிறைவான வாழ்க்கை வாழ்ந்து வருகிறேன்.இவ்வாறு அவர் கூறினார். - நமது நிருபர் -