உள்ளூர் செய்திகள்

/ ஸ்பெஷல் / பானுவாசர ஸ்பெஷல் / 112 வயது பள்ளிக்கு புது வடிவம் கொடுக்கும் இளைஞர்கள்

112 வயது பள்ளிக்கு புது வடிவம் கொடுக்கும் இளைஞர்கள்

இன்போசிஸ் நிறுவனர் நாராயணமூர்த்தி படித்த 112 ஆண்டுகள் ஆன பழைய கோலார் பள்ளிக்கு புது வடிவம் அளிக்கப்பட்டுள்ளது.கோலார் மாவட்டம், சீனிவாசப்பூர் தாலுகாவில் அரசு சார்ந்த கன்னட தொடக்கப்பள்ளி உள்ளது. இது, பிரபல தொழிலதிபர் இன்போசிஸ் நிறுவனர் நாராயண மூர்த்தி படித்த பள்ளியாகும். 112 ஆண்டுகள் பழமையானது. இன்றைக்கும் நுாற்றுக்கணக்கான மாணவர்கள் படிக்கின்றனர்.

நன்கொடையாளர்கள்

இந்த பள்ளியில் பிள்ளைகளை சேர்க்க, பெற்றோர் ஆர்வம் காட்டுகின்றனர். இக்கட்டடம் 1913ல் கட்டப்பட்டது. மிகவும் பழமையானது என்பதால், உட்புறமும், வெளிப்புறமும் பொலிவிழந்து காணப்பட்டது.இப்பள்ளிக்கு பெங்களூரின் இளைஞர் சங்கம், புது வடிவம் கொடுத்துள்ளது. நன்கொடையாளர்களிடம் நிதி வசூலித்து பள்ளியை சீரமைத்துள்ளது.கட்டடத்தின் ஏழு வகுப்பறைகளின் சுவர்கள், வெளிப்புற சுவர்களுக்கு இளைஞர் சங்கத்தின் உறுப்பினர்களே புதிதாக பெயின்ட் அடித்தனர். பள்ளியின் அழகை அதிகரிக்கும் நோக்கில், ஓவியங்கள் வரைந்துள்ளனர். சிறார்களை ஈர்க்கும் வகையில் பிராணிகள், பறவைகள், கணிதம், அறிவியல் தொடர்பான ஓவியங்களை வரைந்துள்ளனர்.பெங்களூரு பல்கலைக்கழக மாணவர்கள், சமூக சேவைகளில் ஈடுபடும் ஆர்வத்தில் 'இளைஞர் சங்கம்' என்ற தொண்டு அமைப்பை ஏற்படுத்தி உள்ளனர். இந்த அமைப்பு மற்ற அமைப்புகளை விட மாறுபட்டது.இதில் உறுப்பினராக உள்ள இளைஞர்கள் ஒவ்வொருவரும், ஏதாவது ஒரு கலையில் கை தேர்ந்தவர்கள். இவர்கள் 'ஸ்கூல் பெல்' என்ற பெயரில், பள்ளிகளை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டு உள்ளனர்.

400க்கும் அதிகம்

மாநிலம் முழுவதும், 400க்கும் மேற்பட்ட பள்ளிகளுக்கு, புது வடிவம் கொடுத்து உள்ளனர். தொழிலாளர்களை நாடாமல், இளைஞர்களே பணிகளை மேற்கொள்கின்றனர். இந்த அமைப்பில் மாணவியரும் உள்ளனர். அரசு பள்ளிகளை மேம்படுத்தி மாணவர் எண்ணிக்கையை அதிகரிப்பது, ஏழை மாணவர்களுக்கு உதவுவதும், அமைப்பினரின் குறிக்கோளாகும்.இளைஞர்களின் சேவையை, அனைவரும் பாராட்டுகின்றனர். 'பப்' புக்கு செல்வது, மது பார்ட்டி நடத்துவது, நண்பர்களுடன் ஊர் சுற்றுவது போன்ற பழக்கங்கள் அதிகம் உள்ள சூழ்நிலையில், பள்ளிகளின் நலனுக்காக பாடுபடும், இளைஞர்களின் சேவை பாராட்டத்தக்கதாகும்; மற்ற இளைஞர்களுக்கு முன் மாதிரியாக திகழ்கின்றனர் - நமது நிருபர் -.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை