உள்ளூர் செய்திகள்

/ லைப் ஸ்டைல் / சுற்றுலா / மனிதனும் தெய்வமாகலாம் மது, சிகரெட் , கோழி காணிக்கை தரும் பக்தர்கள்

மனிதனும் தெய்வமாகலாம் மது, சிகரெட் , கோழி காணிக்கை தரும் பக்தர்கள்

பொதுவாக கடவுள்களுக்கு பூ, பழங்கள், தேங்காய் நெய்வேத்தியமாக அர்ப்பணிப்பது வழக்கம். ஆனால் கார்வாரில் உள்ள 'காப்ரி' கடவுளுக்கு சிகரெட், மதுபானத்தை பக்தர்கள் காணிக்கை செலுத்தி பிரார்த்தனை செய்கின்றனர்.உத்தர கன்னடா மாவட்டம், கார்வார் தாலுகாவின் காளி சங்கமாவில் கோவில் அமைந்துள்ளது. இங்கு குடிகொண்டுள்ள கடவுளை, காப்ரி என்ற பெயரில் பக்தர்கள் அழைக்கின்றனர். இக்கோவில் 500 ஆண்டுகள் பழமையானது. தினமும் இங்கு நுாற்றுக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து, பிரார்த்தனை செய்கின்றனர்.மற்ற கடவுள்களுக்கு பூக்கள், பழங்கள், தேங்காயை அர்ப்பணித்து வேண்டுவது வழக்கம். ஆனால் காப்ரி கடவுளுக்கு மது, சிகரெட், கோழியை அர்ப்பணித்து பூஜித்தால் வேண்டிய வரங்கள் கிடைக்கும் என்பது ஐதீகம். குடும்பத்தில் கஷ்டங்கள் தீரும்.

அனைத்து மதம்

இக்கடவுள் 'மது பிரியர்' என்றே பிரசித்தி பெற்றவர். ஹிந்துக்கள் மட்டுமின்றி, அனைத்து மதத்தவரும் இங்கு வருவது குறிப்பிடத்தக்கது.பிரிட்டிஷார் ஆட்சி காலத்தில், காப்ரி என்ற வெளிநாட்டு பிரஜை அடிமையாக இந்தியாவுக்கு வருகிறார். உத்தரகன்னடா, கார்வாரின் காளி சங்கமாவில் தங்கினார். கிறிஸ்துவராக இருந்தாலும் அனைத்து மதங்களையும் பின்பற்றினார். ஏழை, எளிய மக்களுக்கு தொண்டு செய்து வந்தார்.யோகா, தியானத்தில் ஈடுபட்டு ஞானியாக வாழ்ந்தார். மது, சிகரெட் பழக்கம் உடையவர். இவரை சந்தித்து ஆசி பெற்றால், வாழ்க்கையில் நல்லது நடக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. மக்கள் அவருக்கு மது, சிகரெட் அர்ப்பணித்து, ஆசி பெற்று செல்வர்.

மெழுகுவர்த்தி

ஒருநாள் காப்ரி இறந்து விட்டார். சில நாட்களுக்கு பின், அப்பகுதியில் வசிக்கும் நபரின் கனவில் வந்த காப்ரி, 'எனக்கு ஒரு கோவில் கட்டுங்கள். அந்த கோவிலில் நான் குடிகொள்வேன். என்னை வழிபட்டால் மக்களை வாழ வைப்பேன். கேட்ட வரங்களை அளிப்பேன்' என கூறினாராம்.அதன்பின் அந்நபர், காளி சங்கமாவில் காப்ரிக்கு கோவில் கட்டினார். அன்று முதல் வழிபாடுகள் நடக்கின்றன. வாழ்க்கையில் தொடர் பிரச்னைகளால் அவதிப்படுவோர், இங்கு வந்து மது, சிகரெட் அர்ப்பணித்து வேண்டுகின்றனர்.சிலர் ஆடு, கோழிகளை சமர்ப்பிக்கின்றனர். கஷ்டங்கள் உடனடியாக நிவர்த்தியாகிறதாம். காப்ரி கிறிஸ்துவர் என்பதால், கோவில் முன், பக்தர்கள் மெழுகுவர்த்தி ஏற்றி வழிபடுகின்றனர்.இவரது அபூர்வ சக்தியை பற்றி கேள்விப்பட்டு, கோவா, மஹாராஷ்டிராவில் இருந்தும் பக்தர்கள் வருகின்றனர். ஆண்டு தோறும் மார்ச் மாதம் இரண்டு நாட்கள் திருவிழா நடப்பது வழக்கம். பலன் அடைந்த பக்தர்கள், ஆண்டுதோறும் தவறாமல் திருவிழாவில் பங்கேற்கின்றனர்.கடந்த 500 ஆண்டுகளுக்கு முன்பு, இந்தியாவுக்கு வந்த காப்ரி, தன் நற்பண்புகள், சேவை மனப்பான்மையால் மக்கள் மனதில் இடம் பிடித்து, இன்று கடவுளாக போற்றப்படுகிறார்.

செல்வது?

பெங்களூரு உட்பட முக்கிய நகரங்களில் இருந்தும் கார்வாருக்கு அரசு பஸ்கள், ரயில், தனியார் பஸ்கள் இயக்கப்படுகின்றன.வாடகை வாகனங்கள் வசதியும் உள்ளன. கார்வாரில் தங்குவதற்கு சொகுசு விடுதிகள், ஹோட்டல் உள்ளன.கோவில் அருகில் கடற்கரை உட்பட பல்வேறு சுற்றுலா தலங்கள் உள்ளன. கோவிலை பற்றி தகவல் வேண்டுவோர், மொபைல் எண்: 88615 94832ல் தொடர்பு கொள்ளலாம். - நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ