உள்ளூர் செய்திகள்

/ லைப் ஸ்டைல் / சுற்றுலா / குடும்பத்தினருடன் நேரம் செலவிட எடமடு மலை

குடும்பத்தினருடன் நேரம் செலவிட எடமடு மலை

பெங்களூரில் ஐ.டி., உள்ளிட்ட நிறுவனங்களில் வேலை செய்வோர், வார இறுதி நாட்களில் காரை எடுத்துக் கொண்டு, தங்கள் குடும்பத்தினருடன், 'லாங் டிரைவ்' சென்று வர ஆசைப்படுவர். அதிலும் அரைநாள், ஒரு நாளில் திரும்பி வரும்படியான இடங்களை அதிகம் தேர்வு செய்வர். அவற்றில் ஒன்று எடமடு மலை. பெங்களூரில் இருந்து 88 கி.மீ., துாரத்தில் உள்ள எடமடு மலை, ராம்நகரின் கனகபுரா தாலுகாவில் அமைந்துள்ளது. மலை உச்சியில் முத்துராயசாமி கோவில் உள்ளது. இதனால், இம்மலைக்கு முத்துராயசாமி மலை என்ற பெயரும் உள்ளது. குடும்பத்தினருடன் நேரத்தை செலவழிக்க ஏற்ற இடமாக உள்ளது. 'டிரெக்கிங்' செல்ல நினைப்போர் அடிவாரத்தில் காரை நிறுத்திவிட்டு, பாறைகள் மீது ஏறி மலை உச்சிக்கு செல்லலாம். அடிவாரத்தில் இருந்து மலை உச்சிக்கு வாகனங்கள் செல்ல வழி உள்ளது. பாதை கரடுமுரடாக காட்சி அளிக்கும். கார், பைக்கில் செல்லும் போது, 'ஆப் ரோடில்' சென்றது போன்ற அனுபவம் கிடைக்கும். மலை உச்சியில் ராமர், ஹனுமன் சிலைகளும் உள்ளன. ராமர், ஹனுமனுக்கு ஆசி வழங்குவது போன்று அமைக்கப்பட்டு சிலைகள் சுற்றுலா பயணியரை வெகுவாக கவர்கின்றன. மலை உச்சியில் வட்ட அரங்கு உள்ளது. குடும்பத்தினருடன் அங்கு அமர்ந்து பேசிக் கொண்டு, ஒன்றாக சாப்பிடலாம். பாறைகள் மீது அமர்ந்து துாரத்தில் தெரியும் குளங்கள், கிராமங்களின் அழகை கண்டு ரசிக்கலாம். உச்சியிலும் பாறைகளுக்கு நடுவில் சிறிய குளங்கள் உள்ளன. மாலையில் மலை உச்சியில் இருந்து, சூரிய அஸ்தமனத்தை பார்ப்பது கண்கொள்ளா காட்சியாக இருக்கும். மலை உச்சியில் உள்ள பாறைகளின் குகைக்குள் இறங்கிச் சென்று, புகைப்படம் எடுப்பது புதிய அனுபவமாக இருக்கும். மொத்தத்தில் குடும்பத்தினருடன் நேரத்தை போக்க ஏற்ற இடம். - நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ