உள்ளூர் செய்திகள்

/ லைப் ஸ்டைல் / சுற்றுலா / பொழுதுபோக்கிற்கு குண்டம்மாகெரே ஏரி 

பொழுதுபோக்கிற்கு குண்டம்மாகெரே ஏரி 

வார இறுதி விடுமுறை நாட்கள் வந்தால், பெங்களூரு நகரவாசிகளுக்கு கொண்டாட்டம் தான். குடும்பத்தினருடன் நேரத்தை செலவிட கப்பன் பார்க், லால்பாக், மால், திரையரங்குகளுக்கு சென்று விடுவர். ஆனால் சென்ற இடத்திற்கே திரும்ப, திரும்ப சென்று போர் அடித்தால் மாற்றாக எங்கேயாவது சென்று வரலாம் என்று தோன்றும்.பெங்களூரில் இருந்து 100 கி.மீ., துாரத்தில் ஒரே நாளில் சென்று வரும் வகையில் நிறைய சுற்றுலா தலங்கள் உள்ளன. இதில் ஒன்று குண்டம்மாகெரே ஏரி.பெங்களூரு ரூரல் தொட்டபல்லாபூர் தாலுகாவில் உள்ளது சொன்னேனஹள்ளி கிராமம். இங்கு பரந்து விரிந்த நிலையில் கண்ணுக்கு எட்டிய துாரம் வரை, தண்ணீராக காட்சி தருவது குண்டம்மாகெரே ஏரி. சூரிய உதயம், சூரிய அஸ்மனத்தை கண்டு ரசிக்கும் சிறந்த இடமாக இந்த ஏரி உள்ளது.ஏரியின் கரையில் நடந்து சென்றபடி, சுத்தமான காற்றை சுவாசிக்கும் வாய்ப்பும் உண்டு. ஏரி கரை முடியும் இடத்தில் சிறிய தடுப்பணை சுவர் உள்ளது. அதில் ஏறி மறுபக்கம் சென்றால், மலை உள்ளது. மலை முகட்டில் ஏறி ஏரியை பார்த்தால் பிரமிப்பாக இருக்கும். பைக்கில் வருவோர் ஏரியின் கரையில் பைக்கை ஓட்டி சென்று, கரை முடியும் இடத்தில் நிறுத்துகின்றனர்.பெங்களூரு நகருக்குள் இருந்து காரில் இங்கு வரும் சுற்றுலா பயணியர், சிறிய டேபிள்கள், சேர்களை எடுத்து வந்து ஏரியின் கரையில் அமர்ந்து இயற்கை அழகை கண்டு ரசிக்கின்றனர்.

பழங்கால துாண்கள்

புகைப்படம் எடுத்தும் மகிழ்கின்றனர். ஏரியின் கரையோரம் ஆழம் குறைவு என்பதால், குழந்தைகள் அங்கு குளிக்கும் வாய்ப்பும் உள்ளது. சில்லென காற்று, குளிர்ந்த தண்ணீர் என்று பொழுதுபோக்கிற்கு சிறந்த இடமாக உள்ளது. ஏரியின் கரையில் சில பழங்கால துாண்கள் இடிந்த நிலையில் உள்ளது. அந்த துாண்கள் முன்பும் நின்று புகைப்படம் எடுத்து கொள்ளலாம். இந்த ஏரிக்கு செல்லும் வழியில், இரண்டு பக்கமும் விவசாய நிலங்கள் அதிகம் உள்ளன. அங்கு விளைவிக்கும் காய்கறிகளை, குறைந்த விலைக்கு விவசாயிகளிடம் இருந்தும் வாங்கும் வாய்ப்பும் உண்டு. கிராமத்து மக்கள் வாழ்க்கை முறையையும் காணலாம். ஏரி கரையில் வாகனங்களை நிறுத்தும் வசதி உள்ளது. பெங்களூரு நகரில் இருந்து இந்த ஏரி 60 கி.மீ., துாரத்தில் உள்ளது.

எப்படி செல்வது?

மெஜஸ்டிக் பஸ் நிலையத்தில் இருந்து தொட்டபல்லாபூருக்கு பி.எம்.டி.சி., பஸ்கள் இயக்கப்படுகின்றன. பஸ் நம்பர் 285 எம். ஆனால் இங்கிருந்து சொன்னேனஹள்ளி கிராமத்திற்கு செல்ல பஸ் வசதி இல்லை. இதனால் ஏரியை சுற்றி பார்க்க செல்வோர் சொந்த வாகனத்தில் சென்றால் நல்லது. - நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை