அரை நிலவு தோற்றத்துடன் காணப்படும் ஓம் கடற்கரை
- நமது நிருபர்- உத்தர கன்னடாவில் கோகர்ணாவில் உள்ளது அரை நிலவு போல காட்சியளிக்கும், 'ஹால்ப் மூன்' கடற்கரை. இது, ஓம் கடற்கரையில் இருந்து ஒரு மலையால் பிரிக்கப்பட்டு உள்ளது. அரை நிலவு போல தோற்றத்துடன் காணப்படுவது இதன் முக்கிய அம்சமாக உள்ளது. இந்த கடற்கரையை சுற்றி அடர்ந்த வனப்பகுதி உள்ளது. இதனால், எந்த நேரமும் சில்லென காற்று வீசும். கடல் நீரும் குளிர்ச்சியாகவே இருக்கும். அந்த நீரில் நீச்சல் அடிக்கும் போது, உற்சாகமான உணர்வுகள் ஏற்படும். கண் முன் உள்ள எல்லையற்ற கடல். பின்னால் காணும் அடர்ந்த காடு ஆகியவை, தனி தீவில் வசிப்பது போன்ற உணர்வை ஏற்படுத்தும். கயாக்கிங், துடுப்பு படகு ஆகிய செயல்பாடுகளும் உள்ளன. ஏராளமான குடிசை உணவகங்களும் அங்கு உள்ளது. ஓம் கடற்கரையில் இருந்து தெற்கு நோக்கி சென்று, அங்கிருந்து நேராக, 'டால்பின் கபே' என்ற பகுதியை நோக்கி நடந்து செல்ல வேண்டும். அங்கிருந்து சிறிது நேரத்தில் ஹால்ப் மூன் கடற்கரையை சென்றடையலாம். இல்லாவிட்டால் ஓம் கடற்கரையிலிருந்து, 'ஸ்பீட் போட்' என சொல்லப்படும், வேகமான படகுகளில் அங்கு சென்றடையலாம். அடர்ந்த வனப்பகுதி தோற்றத்துடன் கூடிய கடற்கரையில், ஒரு துணியை விரித்து படுத்து கொண்டு, சூரியனை பார்ப்பது கண்கொள்ளா காட்சியாக இருக்கும். அப்பகுதியில் உள்ள மலையில் மலையேற்றம் செய்யலாம். ஆனால், மழைக்காலத்தில் மலையேற்றம் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. கடற்கரையில் கைப்பந்து, கிரிக்கெட், கால்பந்து போன்ற விளையாட்டுகளை விளையாடலாம். மாலை 4:00 மணிக்கு மேல் குளிர் துவங்கிவிடும் என்பதால், நெருப்பு மூட்டி கொள்ளலாம். நகர வாழ்க்கையின் சலசலப்பில் இருந்து தப்பித்து, இயற்கையின் மடி சேர ஆசைப்படுபவர்களுக்கு, இந்த கடற்கரை ஒரு வரப்பிரசாதம். குடும்பத்தினருடன் நேரத்தை செலவிடவும் ஏற்ற இடம்.