உள்ளூர் செய்திகள்

/ லைப் ஸ்டைல் / சுற்றுலா /  அடர்ந்த வனத்தில் அமைந்துள்ள புருடே நீர்வீழ்ச்சி

 அடர்ந்த வனத்தில் அமைந்துள்ள புருடே நீர்வீழ்ச்சி

- நமது நிருபர் -: ம ழைக்காலம் வந்துவிட்டால், இயற்கை ஆர்வலர்கள் குஷி அடைகின்றனர். நீர்நிலைகள் குறிப்பாக நீர்வீழ்ச்சிகளை தேடி செல்கின்றனர். கர்நாடகாவின் பல மாவட்டங்களில், அற்புதமான நீர்வீழ்ச்சிகள் உள்ளன. ஒவ்வொன்றும் சுற்றுலா பயணியரை, சுண்டி இழுக்கின்றன. இவற்றில் புருடே நீர்வீழ்ச்சியும் ஒன்றாகும். உத்தர கன்னடா மாவட்டம், சித்தாபுரா தாலுகாவில் புருடே நீர்வீழ்ச்சி, அற்புதமான நீர்வீழ்ச்சியாகும். இதை, ' இலிமனே நீர்வீழ்ச்சி' என்றும் அழைக்கின்றனர். ஏன் என்றால் இது மலையில் இருந்து ஐந்து கட்டங்களில், கீழே இறங்குகிறது. ஒவ்வொரு கட்டமும், தனி நீர்வீழ்ச்சி உருவாக்குகிறது. அடித்தளத்தில் குளத்தில் சேர்கிறது. மேற்கு தொடர்ச்சி மலைகளின் நடுவே, அடர்த்தியான வனப்பகுதியில் இந்த நீர்வீழ்ச்சி அமைந்துள்ளது. அகநாசினி ஆற்றின், துணை ஆற்றில் இருந்து, புருடே நீர்வீழ்ச்சி உருவாகிறது. அடுக்கடுக்காக பாயும் நீர்வீழ்ச்சியை காண்பது கண்கொள்ளா காட்சியாக இருக்கும். வளைந்து, நெளிந்தும் பாய்ந்து வரும் நீர், கற்பாறைகள் மீது விழுந்து புள்ளிகளாக தெறித்து விழும் அழகை வர்ணிக்க, வார்த்தைகளே இல்லை. 295 அடி உயரத்தில் இருந்து, கீழே தண்ணீர் பாய்ந்து வருகிறது. சாகசம் செய்வதில் ஆர்வம் உள்ளவர்களுக்கு, தகுந்த இடம். பசுமையான இயற்கை காட்சிகள் கொட்டி கிடக்கும், அடர்ந்த வனப்பகுதியை கடந்து சென்றால், நீர்வீழ்ச்சியை அடையலாம். இதற்காக கரடுமுரடாக பாதையில் நடந்து செல்ல வேண்டியிருக்கும். இயற்கையை ரசித்தபடி, மாசு இல்லாத துாய்மையான காற்றை சுவாசித்தபடி, சிறிது பொழுது போக்கினால் மனமும், உடலும் உற்சாகம் அடையும். ஆனால், மழைக்காலத்தில் இங்கு செல்லும் போது, மிகவும் கவனம் தேவை. பாறைகள் வழுக்கி விடும். நீர்வீழ்ச்சியின் கீழ்ப்பகுதி எவ்வளவு ஆழம் என்பது, யாருக்கும் தெரியாது. எனவே, நீரில் இறங்குவது பாதுகாப்பானது அல்ல. தொலைவில் இருந்து நீர்வீழ்ச்சியை ரசித்துவிட்டு, திரும்புவது நல்லது. அங்கு உணவு கடைகள் இல்லை. சுற்றுலா பயணியர் குடிநீர், சிற்றுண்டி, குளுக்கோஸ், முதலுதவி சிகிச்சை பொருட்களை எடுத்து செல்ல வேண்டும். இப்பகுதிகளில் அட்டைப்பூச்சுகள் அதிகம் இருக்கும்.

எப்படி செல்வது?

பெங்களூரில் இருந்து, 450 கி.மீ., சித்தாபுராவில் இருந்து 20 கி.மீ., சிர்சியில் இருந்து 45 கி.மீ., தொலைவில் புருடே நீர்வீழ்ச்சி அமைந்துள்ளது. அனைத்து நகரங்களில் இருந்தும், சித்தாபுராவுக்குர கே.எஸ்.ஆர்.டி.சி. பஸ்கள், ரயில்கள் இயக்கப்படுகின்றன. தனியார் பஸ் வசதியும் உள்ளது. சித்தாபுராவில் இருந்து, வாடகை வாகனங்களில் நீர்வீழ்ச்சிக்கு செல்லலாம். 3 - 4 கி.மீ., தொலைவு வனப்பகுதி பாதையில் நடந்து செல்ல வேண்டும். அனுமதி நேரம்: புருடே நீர்வீழ்ச்சிக்கு செல்ல நேரம் ஏதும் நிர்ணயிக்கப்படவில்லை. எந்த நேரத்திலும் செல்லலாம். ஆனால் அடர்ந்த வனம் என்பதால், வழி மாறும் அபாயம் உள்ளது. எனவே இருள் சூழ்வதற்குள், அங்கிருந்து திரும்புவது நல்லது. சிறார்களுடன் சென்றால், அதிகமான கவனம் அவசியம். அருகில் உள்ள நீர்வீழ்ச்சி: சாத்தோடி நீர்வீழ்ச்சி, யானா குகைகள், மாரிகாம்பா கோவில், மாகோடு நீர்வீழ்ச்சி, உச்சல்லி நீர்வீழ்ச்சி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !