வனவிலங்கு பூங்காவில் பஸ் சபாரி செல்வோமா?
மைசூரு மாவட்டம், ஹுன்சூர் அருகில் அமைந்து உள்ளது வீரனஹொசஹள்ளி கேட். இங்கிருந்து 30 கி.மீ., தொலைவில் நாகரஹொளே தேசிய வனவிலங்கு பூங்கா உள்ளது.வனத்துறை சார்பில் காலை, மாலையில் பஸ் சபாரி இயக்கப்பட்டு வருகிறது. வீரனஹொசஹள்ளி சோதனை சாவடியில் இருந்து பூங்காவுக்குள் 25 கி.மீ., தொலைவில் உள்ள நுழைவு வாயிலில் மண்டல வனத்துறை அலுவலகம் உள்ளது. இங்கு இருந்து பஸ் சபாரி புறப்படுகிறது.காலை, மாலையில் மட்டுமே பஸ் சபாரி இயக்கப்படுகிறது. வார இறுதி நாட்கள், தேசிய விடுமுறை நாட்களில், பஸ் சபாரியில் பயணியர் கூட்டம் அதிகமாக இருக்கும். எனவே, ஆன்லைனில் முன்கூட்டியே முன்பதிவு செய்ய வேண்டும். அப்போது தான் இடம் கிடைக்கும்.பஸ்சில் பயணித்தபடி, மயில்கள், மான்கள், கரடிகள், யானைகள், இரையை வேட்டையாட மரத்தில் அமர்ந்தபடி நோட்டம் விடும் சிறுத்தை, ஓநாய், புலிகள், காட்டெருமைகளை காணலாம். சிறிய, பெரிய வன விலங்குகளை அதன் இருப்பிடத்தில் காணலாம். மேலும் வனத்துறை சார்பில் ஜங்கிள் லாட்ஜ் ரிசார்டும் செயல்படுகிறது. நாகரஹொளே ரிசார்ட்டில் தங்கிய பின், ஜீப் சபாரி மூலம் அழைத்து செல்ல, 'பேக்கேஜ்' முறையும் அறிமுகம் செய்து உள்ளது.கோடை காலமான மார்ச், ஏப்ரல் மாதங்களில் இங்கு சபாரி செல்வது சிறந்தது. இந்நேரத்தில் தண்ணீர் தேடி அடர்ந்த வனப்பகுதியில் இருந்து விலங்குகள் வெளியே வர துவங்கும். ஜூலை, அக்டோபர் மாதங்களில் மழை காலம் என்பதால், சாலைகள் சேறும், சகதியுமாக இருக்கும். அந்நேரத்தில் சபாரி இயங்காது. அத்துடன் விலங்குகளையும் காண வாய்ப்பு இருக்காது.பஸ் சபாரி தினமும் காலை 6:00 முதல் 9:30 மணி வரையிலும்; மதியம் 2:30 முதல் மாலை 5:30 மணி வரையிலும் இயக்கப்படும். பஸ் சபாரியில் பயணிப்போர், ஒன்றரை மணி நேரம் அடர்ந்த வனப்பகுதிக்குள் அழைத்து செல்லப்படுவர். பஸ் சபாரியில் ஒருவருக்கு 650 ரூபாயும்; ஜீப்பில் குடும்பத்துடன் பயணிக்க 2,242 ரூபாய் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. எப்படி செல்வது?
பெங்களூரில் இருந்து ரயிலில் செல்வோர், ஹுன்சூர் ரயில் நிலையத்தில் இறங்கி, அங்கிருந்து பஸ், டாக்சியில் செல்லலாம்.பஸ்சில் செல்வோர், ஹுன்சூர் பஸ் நிலையத்தில் இறங்கி, அங்கிருந்து பஸ், டாக்சியில் செல்லலாம். - நமது நிருபர் -