குழந்தைகளுக்கு பிடித்த ஸ்ரீரங்கபட்டணா பல்முறி நீர்வீழ்ச்சி
குழந்தைகளை ஒரு நாள் பிக்னிக் அழைத்து செல்ல, மைசூரு அருகில் ஸ்ரீரங்கபட்டணாவில் உள்ள பல்முறி நீர்வீழ்ச்சி ஏற்ற இடம். மாண்டியா மாவட்டம், கே.ஆர்.எஸ்., அணையில் இருந்து திறந்து விடப்படும் நீரை தடுத்து, கால்வாய் வழியாக கொண்டு செல்வதற்காக, 6 அடி உயரத்தில் தடுப்பு அணை அமைக்கப்பட்டு உள்ளது. இதனை பல்முறி நீர்வீழ்ச்சி என்று அழைக்கின்றனர். 'பல்முறி' என்றால் கன்னடத்தில் ஆறு வலது புறமாக திரும்புகிறது என்பதாகும். அணையில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர், இந்த தடுப்பணையில் நிரம்பி வழிந்தோடும். இதன் அழகை பார்க்க இரண்டு கண்கள் போதாது. தடுப்பு அணையில் நிரம்பி வெளியேறும் நீர், 1 அடிக்கு குறைவாகவே இருக்கும். எனவே, குழந்தைகள் ஜாலியாக நீரில் இறங்கி விளையாடலாம். அதேவேளையில், இப்பகுதியில் தண்ணீர் கண்ணாடி போன்று இருப்பதால், மீன்கள் குழந்தைகளின் கால்கள் அருகில் செல்வதை பார்த்து அவர்கள் குதுாகலம் அடைவர். இப்பகுதியை சுற்றிலும் தென்னை மரங்கள் பசுமை போர்த்தியபடி காட்சி அளிக்கின்றன. இயற்கையின் இனிமையான ஒலிகளை அனுபவிக்கும் இடமாகவும் உள்ளது. இந்நீர்வீழ்ச்சி அருகில் விநாயகர் கோவில் உள்ளது. இக்கோவிலில் அவ்வப்போது நடக்கும் விழாக்கள், சடங்குகளில் பங்கேற்க, சுற்றுப்புற பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் வருகை தருவர். அப்போது இந்த நீர்வீழ்ச்சியில் நீராடி மகிழ்வர். இயற்கை எழில் கொஞ்சும் இப்பகுதியில் பல திரைப்படங்கள், 'டிவி' சிரீயல் படப்படிப்புகள் நடந்துள்ளன. தடுப்பு அணையில் இருந்து நிரம்பி வழிந்தோடும் கணுக்கால் அடி உயரத்தில் நடந்து செல்லும் போது, உங்களின் கால்களுக்கு 'மசாஜ்' செய்யும் உணர்வை தரும். மார்ச் முதல் ஆகஸ்ட் மாதம் வரை பல்முறி நீர்வீழ்ச்சிக்கு செல்லலாம். அதன் பின், இங்கு நீரின் ஓட்டம் அதிமாக இருக்கும். மேலும் வழுக்கும் தன்மையும் இருப்பதால் ஜாக்கிரதையாக நடந்து செல்ல வேண்டும். தினமும் காலை 6:00 முதல் மாலை 6:00 மணி வரை 'என்ஜாய்' செய்யலாம். குறிப்பிட்ட நேரத்துக்கு பின்னரும் அங்கேயே இருந்தால், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். எப்போதுமே நீரில் குதுாகலத்த பின்னர், அபார பசி எடுக்கும். இ தை உணர்ந்தே, வாகனங்கள் நிறுத்தும் இடத்தில் பல உணவு கடைகள் உள்ளன. குறிப்பாக விதவிதமான மீன்கள் கிடைக்கும். இங்கு குளிக்க விரும்புவோர் அதற்கு ஏற்ற ஆடை அணிந்து கொள்ளுங்கள். வெயிலில் இருப்பதால், தண்ணீர் பாட்டில், தின்பண்டங்கள் கொண்டு வாருங்கள். அதேவேளையில் நீங்கள் சாப்பிட்ட மீதியை அங்கே கொட்டாமல், மறக்காமல் கையில் குப்பையை அகற்ற பையை கொண்டு செல்லுங்கள். அனுமதி இலவசம் என்றாலும், இரு சக்கர வாகனம், கார்களுக்கு கட்டணம் வசூலிக்கப்படுகின்றன. - நமது நிருபர் -