உள்ளூர் செய்திகள்

/ லைப் ஸ்டைல் / சுற்றுலா / கனகபுராவில் கண்களை கவரும் சுன்சி நீர்வீழ்ச்சி

கனகபுராவில் கண்களை கவரும் சுன்சி நீர்வீழ்ச்சி

வார விடுமுறையில் ஒரு நாளை செலவழிக்க, சுன்சி நீர்வீழ்ச்சி ஏற்ற இடமாகும். பெங்களூரு நகரில் இருந்து 85 கி.மீ., தொலைவில் ராம்நகர், கனகபுராவின் சங்கமா, மேகதாது செல்லும் வழியில் சுன்சி நீர்வீழ்ச்சி அமைந்து உள்ளது. கனகபுராவை அடுத்து சங்கமா நோக்கி செல்லும் சாலையில் 21 கி.மீ., பயணம் செய்ய வேண்டும். அங்கிருந்து ஹரோ சிவனஹள்ளி வழியாக 6.5 கி.மீ., சென்றால், சுன்சி கிராமத்தை சென்றடையலாம். சுன்சி கிராமம் வரை, தார் சாலையில் பயணம் செய்யலாம். அங்கிருந்து சிறிது துாரம் மண் சாலையாக உள்ளது. நீர்வீழ்ச்சியை பார்க்க செல்வோர் வாகனங்கள் நிறுத்தவும் வசதி உள்ளது. அங்கு வாகனங்களை நிறுத்தி விட்டு, நடந்து தான் செல்ல வேண்டும். அர்காவதி ஆற்றை கடக்க, சிறிய பாலம் அமைத்துள்ளனர். அதை கடந்து, நடந்து செல்ல வேண்டும். ஆற்றின் கரையோரம் நடந்து செல்வது மிகவும் குதுாகலமாக இருக்கும். மேற்கு தொடர்ச்சி மலையின் விளிம்பில் அமைந்துள்ள இந்த நீர்வீழ்ச்சி, பாறை மலைகள், பசுமையான தாவரங்களால் சூழப்பட்டு உள்ளது. சுன்சி நீர்வீழ்ச்சி செல்லும் வழியில், பயணியருக்காக கண்காணிப்பு கோபுரம் அமைத்துள்ளனர். இதில் ஏறி, காடுகள், பாறைகள் நிறைந்த பகுதியை 360 டிகிரி கோணத்தில் பார்க்கலாம். நீர்வீழ்ச்சிக்கு செல்லும் வழியில் வழுக்கும் பாறைகள், ஆழமான பள்ளத்தாக்குகள் உள்ளன. ஆபத்தான பள்ளத்தாக்கு இருப்பதால், கவனமாக செல்ல வேண்டும். இயற்கையின் அழகில், 50 அடி உயரத்தில் இருந்து கொட்டும் சுன்சி நீர்வீழ்ச்சி அட்டகாசமாக இருக்கும். வார நாட்களை விட, வார இறுதி நாட்களில் இந்த இடம் கூட்டத்தில் திக்குமுக்காடும். மழை காலத்துக்கு பின், குளிர் காலத்தில் நீர்வீழ்ச்சியை பார்க்க செல்ல சரியான நேரம். தினமும் காலை 9:00 முதல் மாலை 6:00 மணி வரை சுற்றிப்பார்க்கலாம். வாகன பார்க்கிங்கிற்கு, 30 ரூபாய் கட்டணம் வசூலிக்கின்றனர்.

எப்படி செல்வது?

பெ ங்களூரில் இருந்து பஸ்சில் செல்வோர், கனகபுரா பஸ் நிலையத்தில் இறங்க வேண்டும். அங்கிருந்து கடைசி ஸ்டாப்பான சுன்சி காலனிக்கு பஸ் ஏற வேண்டும். - நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ