3,310 அடி உயரத்தில் உள்ள ஹலு சிலுமே கங்கா டிரக்
பெங்களூரில் ஐ.டி., - பன்னாட்டு நிறுவனங்களில் வேலை செய்வோர், பணி சுமையால் ஏற்படும் மன அழுத்தத்தை குறைக்க, வார இறுதி நாட்களில் டிரெக்கிங் செல்ல நினைப்பர். பெங்களூரை சுற்றியுள்ள ராம்நகர், துமகூரு, கோலார், சிக்கபல்லாபூரில் ஏராளமான டிரெக்கிங் தளங்கள் உள்ளன. இதில் ஒன்று ஹலு சிலுமே கங்கா டிரக். பெங்களூரு ரூரல் தொட்டபல்லாபூர் மல்லசந்திரா கிராமத்தில் அமைந்துள்ள இந்த டிரெக்கிங் பாயின்ட், கடல் மட்டத்தில் இருந்து 3,310 அடி உயரம் கொண்டது. இந்த மலை முழுதும் அடர்ந்த தாவரங்கள், படர்ந்த புதர்கள், மரங்களால் சூழப்பட்டு உள்ளது. வனப்பகுதிக்குள் நடந்து செல்வது போன்ற உணர்வு கிடைக்கும். அடிவாரத்தில் இருந்து மலை உச்சிக்கு செல்ல இரண்டரை மணி நேரத்தில் இருந்து, மூன்று மணி நேரம் வரை ஆகிறது. கரடுமுரடான, செங்குத்தான பாதைகள் வழியாக செல்வது புதிய அனுபவமாக இருக்கும். சில இடங்களில் பாறைகள் வழுக்கும் தன்மை கொண்டதால், கவனமாக செல்ல வேண்டியது அவசியம். மலை உச்சியில் இருந்து பார்க்கும் போது குண்டம்மாகெரே ஏரி, மகாலிதுர்கா மலையின் பாதையை காண முடியும். மலைக்கு செல்லும் வழியில் கங்கை என்ற கோவில் உள்ளது. இக்கோவிலில் திங்கட்கிழமை மட்டுமே பூஜை நடக்கிறது. இந்த கோவிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு சென்றால் நல்லபடியாக மலையேற்றத்தை முடித்து வரலாம் என்றும் கூறப்படுகிறது. தொட்டபல்லாபூரில் இருந்து மல்லசந்திரா செல்லும் வழியில் ஏராளமான தென்னை மர தோப்புகள், வயல்கள், திராட்சை தோட்டங்களை பார்த்தபடி செல்லும் வாய்ப்பு உள்ளது. மலை அடிவாரம், கிராமத்தில் உணவகங்கள் இல்லை. வீட்டில் இருந்தே தண்ணீர், உணவு எடுத்து செல்வது நல்லது. - நமது நிருபர் -