சாதாரண காபி குடிக்கவும் கபே ஆம்பியன்ஸ் முக்கியம் ப்ரோ!
ஒரு காலத்தில் காபி குடிக்க மட்டுமே என செல்லப்பட்ட இடங்கள், இன்று தனியாக புத்தகம் படிப்பது, லேப்டாப்பில் வேலை செய்வது, புகைப்படங்கள் எடுப்பது... என ஒவ்வொருவருக்கும் கபே என்பது ஒரு தனிப்பட்ட அனுபவமாக மாறி விட்டது. இன்றைய கபேக்கள் சூடாக காபியை ருசித்தபடி வேலை செய்ய ஒர்க்ஸ்பேஸ், வைபை வசதியுடன் கிடைக்கின்றன. கேம்ஸ், புக்சும் உண்டு. கூடவே ஒரு செல்பி எடுத்து இன்ஸ்டாவில் ஏற்றும் அளவுக்கு போட்டோ எடுக்க அழகான ஆம்பியன்ஸ்... என பல அனுபவங்களை பெற முடிகிறது. இன்றைய தலைமுறையினரின் கபே தேர்வு இப்படித்தான் இருக்கிறது. உணவுக்கு எவ்வளவு முக்கியத்துவம் அளிக்கிறார்களோ அந்தளவு அங்குள்ள ஆம்பியன்ஸ், இன்டீரியர், சிணுங்கும் மியூசிக் ஆகியவற்றுக்கும் முக்கியத்துவம் அளிக்கின்றனர். ஆர்.எஸ்.புரத்தில் உள்ள ஒரு கபேயில் ஐஸ்கிரீம் சுவைத்துக் கொண்டிருந்த ஐ.டி. ஊழியர் தன்யா, ''உணவுக்காக மட்டுமின்றி ஒரு ரிலாக்சேஷன் பாயின்ட் ஆகவும் இது போன்ற இடங்கள் உள்ளன. ஆகவே ஒரு நல்ல ஆம்பியன்சுடன் உள்ள கபேக்களை தேடி செல்ல தயங்குவதில்லை'' என்கிறார். சமூக வலைத்தளங்களில் பகிரப்படும் புகைப்படங்கள், வீடியோக்களும் கபே கலாசாரத்திற்கு கூடுதல் வரவேற்பை கொடுத்துள்ளன. ஒரு அழகான கபே, சுவையான உணவு தரும் இடம் மட்டுமல்லாமல் ஒரு 'கன்டென்ட் ஸ்பாட்' ஆகவும் மாறியுள்ளது. உணவின் சுவையைத் தண்டி, கபேக்கள் தரும் 'ஏஸ்தெட்டிக் பிக்சர் பேக்கிரவுண்டை' ஜென்சிக்கள் கொண்டாடுகின்றனர்.