உள்ளூர் செய்திகள்

/ டெக்னாலஜி / வருங்கால தொழில்நுட்பம் / மோடியை தமிழ்ப் பாடகராக்கிய செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம்; விஞ்ஞானம் விபரீதமாகிறதா?

மோடியை தமிழ்ப் பாடகராக்கிய செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம்; விஞ்ஞானம் விபரீதமாகிறதா?

சமீபகாலமாக உலகப் பிரபலங்களின் குரல்களை மிமிக்ரி செய்யும் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் கொண்ட செயலிகள் பல, உருவாகத் தொடங்கிவிட்டன. அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப் துவங்கி பாரதப் பிரதமர் மோடிவரை அவர்களது குரலை அச்சு அசலாக மிமிக்ரி செய்வது, அவர்களைப் போலப் பாடுவது உள்ளிட்ட விஷயங்களை இவை செய்கின்றன. இந்த ஏஐ தொழில்நுட்பம் எவ்வாறு செயல்படுகிறது என்பது குறித்து விரிவாகப் பார்ப்போமா?ஏஐ எனப்படும் ஆர்ட்டிஃபிஷியல் இண்டலிஜன்ஸ் மற்றும் மெஷின் லர்னிங் குறித்து தற்போது பல உலக விஞ்ஞானிகள் ஆய்வு மேற்கொள்கின்றனர். மென்பொருள் அல்காரிதங்கள் பல வகைப்படும். அவற்றில் முக்கியமானது மெஷின் லர்னிங் அல்காரிதம். இதன்மூலம் ஒரு கணினி, மனிதர்கள் மென்பொருளின் கோடிங்கின்போது உட்புகுத்தும் தகவல்களை சேகரித்து அதனை பிரித்து உணர்ந்து கற்றுக்கொள்ளும். உதாரணமாக பிரதமர் மோடி அரசியல் கூட்டங்களின்போது பொதுவெளியில் பேசும் பல ஆடியோ கிளிப்களை ஒரு மெஷின் லர்னிங் மென்பொருளின் அல்காரிதத்தில் புகுத்திவிட்டால் அந்த அல்காரிதம் மோடியின் வார்த்தை உச்சரிப்புகளை தெளிவாகக் கற்கும். அவரது குரல் ஏற்ற இறக்கங்கள், அவரது குரலில் அதிகம் எழும் அலைவரிசை, ஸ்தாயி, குரலின் வேகம் என அனைத்தும் மென்பொருளால் கணிக்கப்படும்.

இவ்வாறு கணிக்கப்பட்ட டேட்டா சிறுசிறு துண்டுகளாக வெட்டப்படும். இந்த துண்டுகளை முன்னுக்குப்பின் மாற்றியமைத்தால் அவரது குரலில் பலவித ஆடியோ கலவைகளை உருவாக்க முடியும். இந்த ஆடியோ கலவைகள் மூலம் உலகின் எந்த மொழியில் வேண்டுமானாலும் மோடியை பேசவோ அல்லது பாடவோ வைக்கமுடியும். நீங்கள் தட்டச்சு செய்யும் வாசகத்தை அவர் குரலில் படிக்க வைக்கவும் முடியும். இவ்வளவு ஏன்? நீங்கள் பேசும் ஆடியோவை மோடி பேசுவதுபோல மாற்ற முடியும். இந்த தொழில்நுட்பம் மூலமாக சமீபத்தில் மோடி குரலில் பல திரை இசைப்பாடல்கள் இன்ஸ்டாகிராமில் ஒலித்தன. இது வரவேற்பைப் பெற்றது. ஆனால் இது ஓர் ஆபத்தான தொழில்நுட்பம் என விஞ்ஞானிகள் பலர் எச்சரித்துள்ளனர். இதில் மேலும் பல ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு, நவீனமாகிவிட்டால் யார் வேண்டுமானாலும் பிறரது குரலை குளோனிங் செய்து அவர் பேசியதுபோல ஆடியோ உருவாக்கி குற்றச்செயல்களில் ஈடுபட முடியும். உலக அரசியல் தலைவர்கள் பேசாத விஷயத்தை அவர்கள் பேசியதுபோல பொய்யாக சித்தரித்து இணையத்தில் வதந்தி பரப்பமுடியும். எனவே செயற்கை நுண்ணறிவு ஆராய்ச்சி அணு ஆயுத சோதனைபோல எப்போதும் கட்டுக்குள் இருப்பதே நல்லது எனப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி