சமைக்கும்போது தீக்காயம் பட்டால் என்ன செய்வது?
சமையல் செய்யும் போது பலருக்கும் உடலில் ஆங்காங்கே காய்ந்த எண்ணெய் தெறிப்பது, சூடான கடாய் மற்றும் குக்கரின் மேல் கை படுவது போன்றவை வாடிக்கையான ஒன்று. 'ஆ.. வலிக்கிறதே.. எரிகிறதே... எனக் கூறிக்கொண்டே ஐஸ்கட்டி தேய்ப்பது, பேனா இன்க் தடவுவது போன்ற முதலுதவி சிகிச்சைகளை மேற்கொள்வர். ஆனால் இது தவறான வழிமுறைகள் என்பது டாக்டர்களின் அட்வைஸாக உள்ளது. பொதுவாக முகம், கை, கைவிரல்கள் உள்ளிட்ட பகுதிகளில் தான் தீக்காயம் ஏற்பட வாய்ப்புகள் அதிகம். ஆனால் தீக்காயம் பட்ட கையை தண்ணீரில் நனைக்க பலரும் தயங்குவர். தீக்காயம் பட்ட பகுதியை தண்ணீரில் நனைக்கும் போது, கொப்புளம் ஏற்படக்கூடும் என்ற தவறான எண்ணமே பலரிடமும் உள்ளது.
இதெல்லாம் கூடாது
தீக்காயத்தின் மீது அரிசிமாவு, டூத் பேஸ்ட், பேனா மை, எண்ணெய் போன்றவற்றைத் தடவக்கூடாது. இது காயம் குணமாவதை தாமத்தப்படுத்தும். டாக்டரிடம் சிகிச்சைக்கு செல்லும் போது காயத்தின் ஆழத்தை சரிவர கண்டுபிடிக்க முடியாது. காயம் ஏற்பட்ட இடத்தில் மோதிரம், வளையல், வாட்ச் போன்றவற்றை கழற்றி விட வேண்டும். காயத்தின் மீது ஏதாவது துணி ஒட்டிக்கொண்டிருந்தால் அதையும் பிரித்தெடுக்கக்கூடாது; அப்போது திசுக்கள் பாதிப்படைய வாய்ப்புள்ளது.