வழக்கொழிந்து போன கம்பவுன்டர் படிப்பு? காரணம் இதுதான்..!
கம்பவுன்டர் என்கிற வார்த்தையைக் கேட்காத 90-ஸ் கிட்ஸ் இருக்கவே முடியாது. தென் தமிழகத்தின் பல பகுதிகளில் நம் வீட்டின் அருகே உள்ள ஓர் பொது மருத்துவரின் கிளீனிக்கில் கம்பவுன்டர் ஒருவர் வேலை செய்து கொண்டிருப்பார். கோடை மற்றும் மழைக் காலங்களில் சளி, காய்ச்சல், இருமல் ஏற்பட்டால் கம்பவுன்டரிடம் மருந்து மாத்திரை வாங்கி சாப்பிட்டவர்கள் ஏராளம்.டாக்டர் வெளியூர் சென்றுவிட்டால், கம்பவுன்டர் டாக்டர்போல நாடி பிடித்து சோதனை செய்து தற்காலிக வலி நிவாரணி மாத்திரைகளைப் பரிந்துரைப்பார். வயது முதிர்ந்த ஒரு கம்பவுன்டர், இளவயது மருத்துவரைவிட மருந்துக் கலவை உருவாக்குவதில் அதிக அனுபவம் பெற்றிருப்பதால் பலர் சாதாரண காய்ச்சலுக்கு கம்பவுன்டரின் மருந்துப் பரிந்துரைகளை அதிகம் நம்புவர். இப்படிப்பட்ட கம்பவுன்டர் என்ன படித்திருக்கிறார், இவரது பணிகள் என்னென்ன எனத் தெரிந்துகொள்வோம்.மருந்து தயாரிப்புத் துறை வளர்ச்சி பெறாத காலகட்டத்தில் இந்தியாவில் அதற்கென பட்டப்படிப்புகள் கிடையாது. சஸ்பெண்டிங் ஏஜண்ட் (Suspending Agents), எமுல்சிஃபையிங் ஏஜண்ட் (Emulsifying agents), பிரசர்வேடிவ்ஸ் (Preservatives), ஸ்டேபிளைசர் (Stabilizers), பைண்டிங் ஏஜண்ட் (Binding agents) ஆகியவை இருந்தால் குறிப்பிட்ட நோய்க்கான ஒரு மருந்தை நீண்ட காலத்துக்குப் பயன்படுத்தலாம். நவீன மருந்து மாத்திரைகளில் இவை அனைத்தும் இருப்பதாலேயே நாம் இருமல் மருந்து துவங்கி தலைவலி மாத்திரைவரை அதன் காலாவதி தேதி முடியும்வரை பயன்படுத்துகிறோம்.ஆனால் 80, 90-களில் தயாரிக்கப்பட்ட பல மருந்து மாத்திரைகள், தைலம், களிம்புப் பூச்சு உள்ளிட்டவற்றில் மேற்கண்ட ரசாயனங்கள் இல்லாததால் இவற்றை சரியான முறையில் கம்பவுண்டிங் செய்வது அவசியம். மருந்து தயாரிப்புத் துறையில் கம்பவுண்டிங் (Compounding) என்றால் சேர்மானமுறை எனப் பொருள்.