இந்தியாவில் துப்பாக்கி சுடுதல் பயிற்சி பெற செய்யவேண்டியது என்ன?
உலகின் ஆபத்தான சர்வதேச விளையாட்டுப் போட்டிகளில் ஒன்று துப்பாக்கி சுடுதல். துப்பாக்கி சுடுதல் போட்டியில் பாதுகாப்பு மிக அவசியம். இதனாலேயே இந்திய துப்பாக்கி சுடுதல் கிளப்களில் பாதுகாப்பாக துப்பாக்கி சுட வசதிகள் செய்யப்பட்டிருக்கும். இந்தியாவில் துப்பாக்கி சுடும் பயிற்சியில் சேர அனுமதி பெறவேண்டும். அத்துடன் துப்பாக்கி சுட உரிமம் பெறுவதும் கட்டாயம். துப்பாக்கி சுட வயது வரம்பு என்ன, துப்பாக்கி உரிமம் பெறுவதற்கு என்னென்ன தகுதிகள் வேண்டுமெனப் பார்ப்போமா?துப்பாக்கி சுடுதல் இருபெரும் பிரிவுகளாகப் பிரிக்கப்படுகிறது. இண்டோர் ஷூட்டிங் ரேஞ்ச் மற்றும் அவுடோர் ஷூடிங் ரேஞ்ச். இண்டோர் ஷூட்டிங் ரேஞ்சில் நீண்ட வெட்டவெளி அறை ஒன்றில் துப்பாக்கி சுட போட்டியாளர்கள் பயிற்சி எடுப்பர். நான்கு பக்கமும் சுவரால் அடைக்கப்பட்ட ஒரு பகுதியில் துப்பாக்கி சுடும்போது எதிரொலிக்கும் சப்தம் காது சவ்வுகளை பாதிக்கும். எனவே அப்பகுதியில் உள்ள அனைவருக்கும் பாதுகாப்பு உடைகள் மற்றும் சவுண்ட் ஃப்ரூஃப் இயர்போன்கள் வழங்கப்படும். சிறிய தூரத்தில் துப்பாக்கி சுட இந்த இண்டோர் பயிற்சி உதவும். சுவர்களில் ஒலியை உறிஞ்சும் பேடிங் வசதி செய்யப்பட்டு இருக்கும். அவுடோர் ஷூடிங் ரேஞ்சில் நகரத்தைத் தாண்டி ஒதுக்குப்புறமான மலை அல்லது காட்டுப் பகுதியில் இலக்கில் குறிவைத்து சுட வசதி செய்யப்பட்டு இருக்கும். இண்டோர் ரேஞ்சில் தேர்ச்சி பெற்ற பலர் அடுத்து நீண்ட தூர இலக்கை சுட அவுடோர் ரேஞ்ச் பயிற்சி பெறுவர். இலக்குக்குப் பின்னல் கனமான சுவர் அமைக்கப்பட்டு இருக்கும். பயிற்சி பெறுவோர் ஒருவேளை தவறாக சுட்டாலும் குண்டு சுவர் மீது படும். சமீப காலங்களில் ஏர் பிஸ்டல் மற்றும் ஏர் ரைஃபிள்கள் துப்பாக்கி சுடுதல் பயிற்சிக்குப் பயன்படுத்தப்படுகின்றன. இண்டோர் ரேஞ்சில் அதிகபட்சமாக 10 மீட்டர் தூரம் சுட பயிற்சி பெறலாம். இதற்கு உரிமம் தேவையில்லை. இதற்கு மேலான தூரத்தில் உள்ள இலக்கை சுட்டுப் பயிற்சி செய்ய 2016 ஆம் ஆண்டு மத்திய அரசு உரிமத்தை கட்டாயமாக்கி உத்தரவு வெளியிட்டுள்ளது. துப்பாக்கி உரிமம் வழங்க, பாதுகாப்பு கருதி அதிக கட்டுப்பாடுகளைக் கடைப்பிடிக்கும் உலக நாடுகளில் ஒன்று இந்தியா.