இதுவல்லவோ அடக்கம் | ஆன்மிகம் | Aanmeegam | Dinamalar
இதுவல்லவோ அடக்கம் ஒருமுறை ராமானுஜர் திருப்பதி திருமலைக்கு எழுந்தருளினார். ஊர் எல்லையில் அவருக்கு வரவேற்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அவரை வரவேற்க தீர்த்தப் பிரசாதத்துடன் வந்தவர் யார் தெரியுமா? பெரிய திருமலை நம்பி என்னும் மகான். இவர் யார் தெரியுமா? ராமானுஜரின் தாய்மாமனார். அத்துடன், அவரது குருவும் கூட. ராமானுஜர் அவரது திருவடிகளில் விழுந்து பணிந்து வணங்கினார். “குருவே! இந்த தள்ளாத வயதில், அறிவில் உயர்ந்தவரான தாங்கள் தான் என்னை வரவேற்க வர வேண்டுமா? யாரேனும் சிறியவரை அனுப்பியிருக்கக் கூடாதா?” என்றார். வயதை மட்டுமல்ல, தன்னை விட பக்தி ஞானத்தில் மிகப்பெரியவர் திருமலை நம்பி என்பதை ராமானுஜர் அறிவார். அதற்கு திருமலை நம்பி என்ன பதில் சொன்னார் தெரியுமா? “ராமானுஜா, இந்த திருமலை முழுவதும் தேடிப்பார்த்தேன். என்னை விட சிறியவர் யாரும் என் கண்ணில் படவில்லை” என்றார். ஆகா! பெரிய மகானாக இருந்தும் எவ்வளவு தன்னடக்கம். இப்போதெல்லாம், பக்தியில் பணமும், அகந்தையும் தான் தாண்டவமாடுகிறது. நம்பியின் தன்னடக்கத்தை நாம் எப்போது பின்பற்றப் போகிறோம்?