ஆசைகள் நிறைவேற என்ன செய்யலாம்? | ஆன்மிகம் | Aanmeegam | Dinamalar
ஆசைகள் நிறைவேற என்ன செய்யலாம்? உலகத்தில் அடங்காத ஒன்று என்றால் ஆசை தான். ஆசையே அனைத்து துன்பங்களுக்கும் காரணம் என்கிறார் புத்தபெருமான். புத்தர் துறவறம் பூண வேண்டுமென நினைத்தது கூட ஆசை தானே என வேடிக்கையாகவும் சொல்பவர்கள் உண்டு. இது ஒரு நியாயமான ஆசை. இதுபோல, குடும்பமாக வாழ்பவர்களுக்கு ஒரு வீடு, உண்ண உணவு, உடுத்த உடை என்ற நியாயமான ஆசைகள் இருப்பதில் தவறில்லை. தன் மகளுக்கும், மகனுக்கும் நல்ல வாழ்க்கைத்துணை வேண்டும் என நினைப்பதில் தவறில்லை. தன் குழந்தைகள் தீர்க்காயுளுடன் வாழ வேண்டும் என ஆசை கொள்வதில் தவறில்லை. இதுபோன்ற நியாயமான ஆசைகளை நிறைவேற்றி வைக்க, மகாளய பட்ச தசமி திதி உகந்த நாள். இந்த நாளில், சிவனின் அம்சமான வீரபத்திரரை வணங்க வேண்டும். இவர் அகால மரணங்களை தடுத்து நிறுத்துவார். நம் குடும்பத்தில், அகால மரணமடைந்தவர்கள் இருக்கலாம். அவர்களின் நிலை தங்களுக்கும் வராமல் தடுக்க, இந்நாளில் நம் முன்னோருக்கு தர்ப்பணம் செய்வதுடன், வீரபத்திரரை வணங்குவதன் மூலம் பாதுகாப்பான வாழ்வு அமையும்.