சுவாமியே சரணம் ஐயப்பா | ஆன்மிகம் | Spirituality | Aanmeegam
சுவாமியே சரணம் ஐயப்பா நாளை கார்த்திகை மாத பிறப்பு. இன்று சபரிமலைக்கு செல்லும் பக்தர்கள் மாலை அணிவார்கள். எங்கும் சுவாமியே சரணம் ஐயப்பா என்ற கோஷம் கேட்கும். சபரிமலை சாஸ்தாவை ஐயப்பன் என்கிறோம். ஐயன் என்றால் தலைவன். அதனால் தான் பெரியவர்களை ஐயா என மரியாதையுடன் அழைக்கிறோம். அப்பன் என்றால் தந்தை. தலைவனாகிய அந்த ஐயனே நமக்கு தந்தை என்ற பொருளில் ஐயப்பன் என்ற சொல் அமைந்தது. ஐயப்பனின் வளர்ப்புத்தந்தை பந்தளமகாராஜா. அவருக்கு இன்னொரு மகனும் உண்டு. அந்த மகனுக்கு பட்டம் சூட்ட பந்தளராணி விரும்பினாள். ஐயப்பன் அதற்கு தடையாக இருக்கலாம் என்ற எண்ணத்தில் அவரை அங்கிருந்து விரட்ட முடிவெடுத்தாள். தனக்கு தலைவலி வந்தது போலும் அதைக் குணமாக்க புலிப்பால் கொண்டு வர வேண்டும் என்றும் சொன்னாள். ஐயப்பன் காட்டுக்குச் சென்று பல புலிகளுடன் வந்தார். இதையடுத்து அவரது தெய்வசக்தி வெளிப்பட்டது. குடும்ப வாழ்வில் இதுபோன்ற நிகழ்வுகள் தவிர்க்க முடியாதது என்பதை உணர்ந்த ஐயப்பன் காட்டிற்குச் சென்று தவத்தில் அமரப்போவதாக தந்தையிடம் சொல்லிவிட்டு கிளம்பினார். அவரை எங்கே வந்து காண்பது என ராஜா கேட்க நீங்கள் கடுமையான மலைப்பாதையில் வரும்போது ஒரு கருடன் வழிகாட்டும் என்றார். ராஜாவும் மலையேறும் போது கருடன் வழி காட்டியது. துளசிமணி மாலை அணிந்த அவர் தலையில் இரு முடியில் ஐயப்பனுக்கும் தனக்கும் தேவையான பொருட்களை வைத்திருந்தார். இதுவே இருமுடி கட்ட காரணமாயிற்று.