ராமாயணத்துக்கு முன்பே தோன்றிய உலகின் முதல் சிவன் கோயில்! ஆச்சரியம் தரும் வரலாறு
ராமநாதபுரத்தில் உள்ள உத்தரகோசமங்கை மங்களநாதர் கோயில் சிவன் கோயில்களில் மிகவும் பிரசித்தி பெற்றது . இது தான் உலகிலேயே முதலில் தோன்றிய சிவன் கோயில் என நம்பப்படுகிறது. இங்கு தான் முதன் முதலில் ஆருத்ரா தரிசனம் கொண்டாடப்பட்டது. சிவபெருமான் பார்வதிக்கு வேதாகமங்களின் ரகசியங்களை உபதேசம் செய்த இடமாக கருதப்படுகிறது. உத்திரன் + கோசம் + மங்கை . மங்கைக்கு உத்திரன் உபதேசம் செய்த இடம் என்பதால் உத்தரகோசமங்கை என்ற பெயர் கோயிலுக்கு வந்தது. வாழ்க்கையில் ஒரு முறையாவது சிவன் பக்தர்கள் நிச்சயம் தரிசனம் செய்ய வேண்டிய கோயில் இது திருவாரூரில் பிறந்தால் முக்தி, காசியில் இறந்தால் முக்தி, அண்ணாமலையை நினைத்தால் முக்தி என்பார்கள். இங்கே உத்தரகோசமங்கை மண்ணை மிதித்தாலே முக்தி. நவகிரகங்கள் அறியப்படாத காலத்தில் இருந்த சூரியன் , சந்திரன், செய்வாய் மட்டுமே இங்கு கிரகங்களாக உள்ளது. இதில் இருந்தே இந்த கோயில் எவ்வளவு பழமையானது என்பதை அறிய முடிகிறது. மூலவர் மங்கள்நாதர் சுயம்புவாக இலந்தை மரத்தடியில் தோன்றியவர். அந்த மரம் இன்னும் உள்ளது. மங்களேச்சுவரர், மங்களேசுவரி , ஆடல்வல்லான் மூர்த்தியும் இங்கே மரகதப் பச்சை. தீர்த்தமும் பச்சை. விருட்சமும் பச்சை.