ஸ்ரீ ராமானந்த சரஸ்வதி சுவாமிகள் புகழாரம்
ஸ்ரீ ராமானந்த சரஸ்வதி சுவாமிகள் புகழாரம் / The Pancha Ratna Kirans of the Thirukalyanam / Anusathin Anugraham / Madurai மதுரை மீனாட்சியை மகிழ்விக்கும் திருக்கல்யாணப் பஞ்ச ரத்ன கீர்த்தனைகள் மதுரையில் பாடப்பட்டது சிறப்பானது என ராமானந்த சரஸ்வதி சுவாமிகள் பாராட்டினார். பாபநாசம் சிவன் மகள் கலைமாமணி டாக்டர் ருக்மிணி ரமணி அவர்கள் இயற்றி இசையமைத்த மதுரை மீனாட்சி திருக்கல்யாணப் பஞ்ச ரத்னம் இசை நிகழ்ச்சி ஆண்டாள்புரம் வசுதாரா வளாகத்தில் நடந்தது. சிவானுக்கிரஹா குழுவினர் நிகழ்த்திய இந்த கீர்த்தனையில், மதுரை சச்சிதானந்தம் வயலின், முனைவர் மதுரை தியாகராஜன் மிருதங்கம், நல் கிராமம் திருமுருகன் மோர்சிங் இசைத்தனர். ருக்மணி ரமணி அம்மாள் தலைமையில் 12 கலைஞர்கள் மீனாட்சி பஞ்ச ரத்ன கீர்த்தனைகள் பாடினர். மதுரை ஸ்ரீசக்ர ராஜராஜேஸ்வரி பீடம் பூஜ்யஸ்ரீ ராமானந்த சரஸ்வதி சுவாமிகள் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு, இசைக் கலைஞர்களை கௌரவித்தார். ருக்மிணி ரமணிக்கு சங்கீத சேவா ரத்னா விருதினை வழங்கி அவர் பேசியதாவது: மீனாட்சி திருக்கல்யாண பஞ்ச ரத்ன கீர்த்தனைகள் அம்பாளுக்கு மிகவும் பிரியமானது. ருக்மிணி ரமணி அதனை மிக அழகாக இயற்றி இருக்கிறார். மீனாட்சிக்கு மிகவும் பிடித்த நிறம் பச்சை. அதே நிறத்தில் உடைகள் அணிந்து அவர்கள் பாடிய கீர்த்தனையால் மீனாட்சியின் மனம் குளிர்ந்து போயிருக்கும். இந்த உலகுக்கு அரசியான மீனாட்சிக்கான இந்த கீர்த்தனைகள் மதுரையில் பாடப்பட்டது சிறப்பானது எனக்கூறி ஆசீர்வதித்தார். நிகழ்ச்சி ஏற்பாடுகளை அனுஷத்தின் அனுக்கிரகம் நிறுவனர் நெல்லை பாலு செய்திருந்தார்.