பாதாள சாக்கடை பணியில் விஷ வாயு தாக்கி பலியாகும் அபாயம் நீங்கியது | A sewer unclogging Robot
கோவையில் பாதாள சாக்கடை அடைப்பை நீக்க நான்கு ஆண்டுக்கு முன்பு திருவனந்தபுரத்தில் இருந்து தலா 32 லட்சம் ரூபாய் மதிப்பில் ஐந்து ஜென் ரோபோடிக் இயந்திரங்களை பாரத் பெட்ரோலியம் நிறுவனம் மாநகராட்சிக்கு வழங்கியது. துவக்கத்தில் பயன்படுத்தப்பட்ட ஜென் ரோபோடிக் இயந்திரங்கள் நாளடைவில் பழுதாகி கிடப்பில் போடப்பட்டன. இந்த ஐந்து இயந்திரங்களும் எங்கே சென்றன என கவுன்சிலர்கள் கேள்வி எழுப்பினர். இதையடுத்து, பராமரிப்பு பணிகள் முடித்து ஜென் ரோபோட்டிக் இயந்திரங்கள் மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டுவர மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன் ஏற்பாடு செய்தார். பாதாள சாக்கடை அடைப்புகள் ரோடோடிக் இயந்திரங்கள் மூலம் அகற்றும் பணி துவங்கியது. இதன் மூலம் சாக்கடை அடைப்பு நீக்கம் எளிதானது. இதனால் பணியின் போது விஷவாயு தாக்கி பலியாகும் வாய்ப்பு இல்லை. மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களுக்கும் தலா ஒன்று வழங்கப்பட்டுள்ளது. இந்த இயந்திரம் ஒரு லிட்டர் பெட்ரோல் செலுத்தினால் ஒன்றரை மணி நேரம் வரை செயல்பட்டு 120 கிலோ கழிவை அகற்றும் திறன் கொண்டது. ரோபோட்டிக் வருகை துாய்மை பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது. கோவையை அடுத்து மற்ற மாநகராட்சியிலும் ரோபோட்டிக் இயந்திரங்களை முழுமையாக பயன்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தினர்.