ஒரு மாத குட்டி யானை 24 மணி நேரம் கண்காணிப்பு | Addition of a baby elephant to Theppakadu camp
கோவை வனச்சரகம் துடியலுார் பிரிவு தடாகம் வடக்கு வனப்பகுதியில் தாயை பிரிந்து பரிதவித்து வந்த ஒரு மாத பெண் யானை குட்டியை கடந்த 24ம் தேதி வனத்துறையினர் மீட்டனர். குட்டியை யானை கூட்டத்தில் சேர்க்கும் முயற்சியில் வனத்துறையினர் தொடர்ந்து ஈடுபட்டு வந்தனர். ஆனால் முயற்சி தோல்வியில் முடிந்தது. இதையடுத்து குட்டியை முதுமலை புலிகள் காப்பகம் தெப்பக்காடு யானை முகாமில் வைத்து பராமரிக்க தமிழக முதன்மை வன உயிரின காப்பாளர் உத்தரவிட்டார். தொடர்ந்து குட்டியை வனத்துறை வாகனத்தில் ஏற்றி வன கால்நடை டாக்டர் சுகுமாரன், வன அதிகரிகள் மற்றும் ஊழியர்கள் பாதுகாப்புடன் முதுமலை தெப்பக்காடு யானைகள் முகாம் கொண்டு வந்தனர். அங்கு வனத்துறையினர் பூஜை செய்து குட்டி யானை பராமரிப்புக்காக கராலுக்குள் கொண்டு சென்றனர். முதுமலை கால்நடை டாக்டர் ராஜேஷ் தலைமையில் மருத்துவ குழுவினர் குட்டியை கண்காணித்து வருகின்றனர். அதனுயுடன் தங்கி கண்காணித்து பராமரிக்க விவேக், சிவன் என்ற இரண்டு ஊழியர்கள் நியமிக்கப்பட்டனர். தற்போது குளிர்காலம் என்பதால் கராலினுள் ஹீட்டர் வசதி செய்யப்பட்டுள்ளது. குட்டிக்கு இரண்டு மணி நேரத்துக்கு ஒரு முறை அல்லது பசிக்கும் போது லாக்டோஜன் பால் பவுடர், குளுக்கோஸ், தண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது. வனத்துறையினர் கூறுகையில், குட்டி யானையின் உடல் நலம் சிறப்பாக உள்ளது. மருத்துவ குழுவினர் கண்காணித்து வருகின்றனர். இரண்டு ஊழியர்கள் 24 மணி நேரமும் உடனிருந்து பராமரித்து வருவதாக வனத்துறையினர் தெரிவித்தனர்.