கோவையில் நவம்பர் 14 முதல் டிசம்பர் 22 வரை 5 செஸ் போட்டிகள் | Coimbatore
கோவையில் நவம்பர் 14 முதல் டிசம்பர் 22 வரை 5 செஸ் போட்டிகள் | Coimbatore | International Master title Chess tournaments begin தமிழ்நாடு மாநில சதுரங்க சங்கம் சார்பில் கோவை மாவட்ட சதுரங்க சங்கம் ஏற்பாடு செய்த 36வது முதல் 40வது வரையிலான ஐந்து தமிழ்நாடு சர்வதேச மாஸ்டர்ஸ் நார்ம் குளோஸ்ட் சர்க்யூட் சதுரங்க போட்டிகள் 2025-26 கோவையில் உள்ள ஹோட்டல் அலங்கார் கிராண்டில் கோலாகலமாக துவங்கியது. இந்த ஐந்து போட்டிகளும் டிசம்பர் 22 வரை நடக்கவுள்ளது. இதுகுறித்து சக்தி குழுமத்தின் தலைவரும், தமிழ்நாடு மாநில சதுரங்க சங்கத்தின் தலைவருமான எம். மாணிக்கம் கூறுகையில்: செஸ் ஒலிம்பியாட் நிகழ்வு தமிழகத்தில் நடைபெற்ற போது முதல்வர் ஸ்டாலின் தமிழகத்தில் 100 கிராண்ட் மாஸ்டர்களை உருவாக்க வேண்டும் என்று விரும்பினார். அதன் அடிப்படையில், 2023 ஆம் ஆண்டு முதல் தமிழ்நாடு மாநில சதுரங்க சங்கம் இந்த சர்வதேச மாஸ்டர்ஸ் தகுதி போட்டிகளை நடத்தி வருகிறது. சர்வதேச மாஸ்டர் ஆவதற்கு 2400 புள்ளிகள் மற்றும் 3 தகுதிகள் தேவை. இந்த தகுதிகளை பெறுவதற்கான வாய்ப்பை தமிழகத்தை சேர்ந்த சிறந்த வீரரகள் உள்நாட்டிலேயே பெற வசதியாக அவர்கள் மிக குறைந்த செலவில் இந்த போட்டிகளில் பங்கேற்க வாய்ப்புகளை ஏற்படுத்தியுள்ளோம். இதற்காக முன்னணி சர்வதேச வீரர்களை தமிழகத்திற்கு வரவழைத்து நமது வீரர்களுடன் போட்டியிட வைத்து வருகிறோம். இதற்கான செலவுகளைச் சங்கம் ஏற்பதன் மூலம் உள்ளூர் வீரர்கள் மிகவும் குறைவான கட்டணத்தில் அதாவது 3 லட்சம் செலவாகும் இடத்தில் 10,000 மட்டும் செலுத்தினால் போதும். இதன் மூலம் தகுதி பெறும் வீரர்களால் உலகத் தர நிகழ்வுகளில் போட்டியிட முடிகிறது. இதுவரை 35 போட்டிகள் நடத்தப்பட்டு, அதன் மூலம் 22 சர்வதேச மாஸ்டர் நார்ம்கள் பெறப்பட்டுள்ளன. தற்போது தமிழகத்தில் 45 சர்வதேச மாஸ்டர்கள் உள்ளனர். அடுத்த 4-5 ஆண்டுகளில் 100 சர்வதேச மாஸ்டர்கள் என்ற இலக்கை எட்ட முடியும் என நம்பிக்கை தெரிவித்தார். தமிழ்நாடு மாநில சதுரங்க சங்கத்தின் பொருளாளர் சீனிவாசன், துணைத் தலைவர் அனந்தராம், சர்வதேச செஸ் கூட்டமைப்பின் முன்னாள் துணைத் தலைவர் சுந்தர் மற்றும் தமிழ்நாடு மாநில சதுரங்க சங்கத்தின் பொதுச் செயலாளர் ஸ்டீபன் பாலசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.