தேர்தல் வாக்குறுதி காற்றோடு போயாச்சு | What is the election promise?
நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே நெலாக்கோட்டை ஊராட்சிக்கு உட்பட்ட 11 வது வார்டில் அமைந்துள்ளது கடலக்கொல்லி, மாங்கம்வயல் மற்றும் பியூஸ் நகர். இப்பகுதிகளில் பழங்குடியின மக்கள் அதிகம் வசிக்கின்றனர். குந்தலாடியில் இருந்து புளியடி வழியாக செல்லும் தார் சாலையில் இருந்து இந்த கிராமங்களுக்கு செல்லும் சாலை பிரிந்து செல்கிறது இதில் கடலக்கொல்லி முதல் மாங்கம்வயல் செல்லும் சாலை கடந்த 2021 ம் ஆண்டு கூடலூர் ஊராட்சி ஒன்றியம் மூலம் சாலை அமைக்க ஜல்லி பரப்பப்பட்டது. தொடர்ந்து இந்த சாலையை சீரமைக்காமல் விட்டதால் தற்போது கற்கள் பெயர்ந்து நடந்து செல்லக்கூட முடியாத நிலையில் வாகனங்களையும் இயக்க முடியவில்லை. இதனால் இப்பகுதி பழங்குடி மக்கள் உள்ளிட்ட விவசாயிகள் சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரம் நடந்தே செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டு உள்ளது. அதேபோல் பியூஸ் நகர் பகுதிக்கு செல்லும் 700 மீட்டர் தூரம் உள்ள சாலையில் பகுதி தூரம் மட்டும் சிமென்ட் சாலையாக கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு சீரமைக்கப்பட்டது. தற்போது இந்த சாலை முழுவதுமாக பெயர்ந்து வாகனங்கள் செல்ல முடியாத நிலையில் மேட்டுப்பாங்கான இந்த சாலையில் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் நடந்தே வரவேண்டிய நிலையில் சிரமம் அடைகின்றனர். இரவு நேரங்களில் அவசர தேவைகளுக்கு இப்பகுதிகளுக்கு நடந்து செல்ல முடியாத நிலையில் வனவிலங்குகள் தொல்லையும் அதிகம் என்பதால் பழங்குடிகள் படும் பாடு சொல்லி மாளாது. ஒவ்வொரு தேர்தலின் போது வாக்குறுதிகளை அள்ளி விட்டு வெற்றி பெறும் அரசியல்வாதிகள் அதன் பின்பு கண்டுகொள்வதே கிடையாது. திராவிட மாடல் ஆட்சி என்பது அனைவருக்குமானது என கூறும் முதல்வர் ஸ்டாலின் அப்பாவி பழங்குடிகளின் அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க முன் வர வேண்டும்.