மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகளுடன் விவசாயிகள் வாக்குவாதம்
மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகளுடன் விவசாயிகள் வாக்குவாதம் / Water Pollution / Noiyyal River / Farmers Protest / Palladam நொய்யல் விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளர் திருஞானசம்பந்தம் தலைமையில் விவசாயிகள், மாசடைந்த நொய்யல் நீரை பாட்டிலில் நிரப்பி பல்லடத்தில் திருப்பூர் தெற்கு மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அலுவலகத்தில் புகார் மனு அளிக்க வந்தனர். முன்னதாக விவசாயிகள் எடுத்து வந்த நொய்யல் நீரின் மாதிரியை மாசுக்கட்டுப்பாட்டு வாரிய கோட்டப் பொறியாளர் சத்யன் ஆய்வு செய்தார். அவர் கூறுகையில், ஆதாரத்துடன் தான் எந்த ஒரு குற்றச்சாட்டையும் நிரூபிக்க முடியும். தண்ணீரின் T.D.S. (Total Dissolved Solids) அளவு 2,100 வரை இருக்கலாம் என விதிமுறை உள்ளது. இதன்படி நீங்கள் எடுத்து வந்துள்ள தண்ணீரில் 1,600 தான் டி.டி.எஸ்., அளவு உள்ளது. அறிவியல் பூர்வமாக நிரூபித்தால் மட்டுமே நடவடிக்கை எடுக்க முடியும் என்றார். இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு நொய்யலின் டி.டி.எஸ்., அளவு, 300க்கும் குறைவாக இருந்தது. இன்று, டி.டி.எஸ்., அளவு பல ஆயிரமாக உள்ளது. தனியார் தொழிற்சாலைகள், மருத்துவமனைகள், உள்ளாட்சி நிர்வாகங்கள் உள்ளிட்ட அனைத்தும் இணைந்து, நொய்யலை கடுமையாக மாசடைய செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றன. நொய்யலுடன் பல்வேறு கழிவுகளும் கலப்பதால் தண்ணீர் கடுமையாக மாசடைந்து விவசாயத்துக்கு பயன்படுத்த முடியாத நிலைக்கு சென்று விட்டது. குறிப்பாக தென்னை விவசாயம் அதிக அளவில் பாதிக்கப்படுகின்றனர். கோவை, திருப்பூர், ஈரோடு என, மூன்று மாவட்ட கலெக்டர்களிடம் இப்பிரச்னையை கொண்டு சென்றும் நொய்யல் நதியை மீட்க நடவடிக்கை இல்லை. நொய்யல் நதிநீர் பயன்படுத்துவதற்கு அற்றது என, பல்கலைக்கழகங்களும் கூட ஆய்வுக்கு பின் பரிந்துரை செய்துள்ளன. கருமத்தம்பட்டி நகராட்சி, சாமளாபுரம் பேரூராட்சி மற்றும் மங்கலம் ஊராட்சிகளின் குப்பைகள், கழிவுகள் நொய்யலில் தான் கலக்கப்படுகிறது. இதைத் தடுக்க மாசுக்கட்டுப்பாடு வாவரியம் என்ன நடவடிக்கை எடுத்துள்ளது. இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக நொய்யலை மீட்க போராடி வருகிறோம். கடுகளவாவது இந்த விஷயத்தில் நல்லது செய்ய யோசியுங்கள் என விவசாயிகள் அதிகாரியிடம் வேதனையுடன் கூறினர். T.D.S. என்பது தண்ணீரில் கரைந்துள்ள அனைத்து திடப்பொருட்களின் ஒட்டுமொத்த அளவை குறிக்கும். இதன்படி ஒரு லிட்டர் தண்ணீரில் tds அளவு ஒரு மில்லி கிராம் என அளவிடப்படுகிறது. குடிநீரில் tds அளவு 500 மில்லி கிராமிற்கு மேல் இருந்தால் அது உடலுக்கு தீங்கு விளைவிக்கலாம் என BIS (bureau of indian standards) புள்ளி விவரம் கூறுகிறது. WHO (world health organization) 300 மில்லி கிராமிற்கும் குறைவான tds அளவு கொண்ட நீர் சிறந்தது என சான்று வழங்கியுள்ளது. எனவே, மாசுக்கப்பட்டு வாரிய அதிகாரி கணக்குப்படி பார்த்தால் கூட நொய்யல் நீர் மாசடைந்து விட்டதாகத் தான் எடுத்துக் கொள்ள முடியும் என விவிசாயிகள் வேதனை தெரிவித்தனர். அனைத்து ஜீவராசிகள் நலன் கருதி அளவின் விளம்பில் உள்ள நொய்யல் நதி மாசடைவதில் இருந்து அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தினர்.