விழும் நிலையில் காம்பவுண்ட் சுவர்... பள்ளி நிர்வாகம் எச்சரிக்கை
கோவை சரவணம்பட்டியில் அரசு உயர்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகின்றது. இங்கு ஆறாம் வகுப்பில் இருந்து பத்தாம் வகுப்பு வரை 500 க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் படிக்கின்றனர். இந்நிலையில் சமீபத்தில் பெய்த மழையால் இந்த பள்ளியில் உள்ள சுற்றுச்சுவர் இடிந்து விழும் நிலையில் உள்ளது. அந்த சுவர் அருகே யாரும் செல்ல வேண்டாம் என்று பள்ளி நிர்வாகம் எச்சரிக்கை விடுத்து பேனர் வைத்துள்ளது. பள்ளி அமைந்துள்ள பகுதி களிமண் நிலம். கடந்த இரண்டு நாட்களாக பெய்த மழையால் தண்ணீர் தேங்கி விரிசல் ஏற்பட்டுள்ளது. காம்பவுண்ட் சுவர் என்பதால் ஆழமான அஸ்திவாரம் அமைக்கப்படவில்லை. கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் வருகின்ற ஆறாம் தேதி திறக்க உள்ளது. இதனால் ஆபத்தான நிலையில் உள்ள காம்பவுண்ட் சுவரை அகற்றுவதோடு மட்டுமின்றி வலுவற்ற நிலையில் உள்ள சுவர்களை ஆய்வு செய்து அப்புறப்படுத்தி விட்டு புதிய காம்பவுண்ட் சுவர் எழுப்ப வேண்டும் என பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் தற்போது பெய்த மழையில் பல அரசு பள்ளிகளில் மைதானங்களிலும், வகுப்பறைகளிலும் மழை தண்ணீர் தேங்கியுள்ளது. இதில் இருந்து டெங்கு காய்ச்சல் பரவுவதற்கு வாய்ப்புகள் உள்ளதாகவும் இதனால் மாணவர்கள் டெங்கு காய்ச்சலினால் பாதிக்கப்படலாம் என்றும் பெற்றோர் கருத்து தெரிவித்துள்ளனர். எனவே பள்ளிகளில் தேங்கி இருக்கும் தண்ணீரை பள்ளிக்கல்வித்துறை அகற்ற வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.