பவானி ஆற்றில் திருப்பி விடப்படும் கழிவு நீர் | Sewarage project is incomplete | Metupalayam
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் நகராட்சிக்கு உட்பட்ட 33 வார்டுகளில் இருந்து வெளியேறும் கழிவு நீர் நேரடியாக பவானி ஆற்றில் வெளியேற்றப்பட்டது. இதனால் ஆற்று நீர் மாசடைந்து குடிநீர் மற்றும் பாசனத்திற்கு பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது. ஆற்று நீர் மாசடைவதை தடுக்க கடந்த அதிமுக ஆட்சியில் 100 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பாதாள சாக்கடை திட்டம் 2018ம் ஆண்டு தொடங்கப்பட்டது இந்த திட்டம் மூலம் குடியிருப்புகளில் இருந்து வெளியேறும் கழிவு நீர் பாதாள சாக்கடை வழியாக வெளியேற்றி சுத்திகரிப்பு செய்து விவசாய பயன்பாட்டுக்கு கொண்டு செல்ல திட்டமிடப்பட்டது இத்திட்டம் 2022 ல் முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டது ஆனால் ஆட்சி மாற்றத்துக்குப் பிறகு வேகம் எடுக்காத காரணத்தால் திட்டம் நிறைவேறுவதில் சுணக்கம் ஏற்பட்டது. இத்திட்டத்தின் கீழ் மேட்டுப்பாளையம் பகுதிகளில் உள்ள பத்தாயிரம் குடியிருப்புகளுக்கு இணைப்பு வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்ட நிலையில் தற்போது 2500 இணைப்புகள் மட்டுமே வழங்கப்பட்டுள்ளன அந்த இணைப்புகளும் சரியாக செயல்படாமல் முடங்கியுள்ளது. மேலும் கழிவு நீரை சுத்திகரிக்கும் சுத்திகரிப்பு நிலையங்கள் சரிவர செயல்படாமல் கழிவு நீர் நேரடியாக பவானி ஆற்றில் திருப்பி விடப்பட்டு வருகிறது. மேலும் நகராட்சி மூலம் 20 அடி வரை இலவசமாக இணைப்பு வழங்க வேண்டும். ஆனால் இலவச இணைப்பு கொடுக்கவில்லை. மாறாக ஒட்டுமொத்தமாக பயனாளிகளிடம் பணம் வசூலித்து அதிகாரிகள் ஊழலில் ஈடுபட்டு வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பொதுமக்கள் புகாரின் பேரில் இன்று பாதாள சாக்கடை திட்டம் நடைபெறும் பகுதிகளில் அதிமுக எம்எல்ஏ செல்வராஜ் நேரடியாக ஆய்வு செய்தார்