கோவை அண்ணா பல்கலை கல்லுாரி அணிகள் பங்கேற்பு | sports | Kovai
கோவை அண்ணா பல்கலைக்கு உட்பட்ட கல்லுாரிகளுக்கு இடையே 11வது மண்டல ஆண்களுக்கான கபடி போட்டி குமரகுரு தொழில்நுட்ப கல்லுாரியில் இன்று துவங்கியது. இப்போட்டிகள் நாளை நிறைவடைகிறது. இதில் 17 கல்லுாரி அணிகள் பங்கேற்றன. போட்டியை அண்ணா பல்கலை 11வது மண்டல விளையாட்டு செயலாளர் சரவணமூர்த்தி, குமரகுரு கல்லுாரி முதலாம் ஆண்டு துறை தலைவர் சிவக்குமார் மற்றும் உடற்கல்வி இயக்குனர் முத்துகுமார் ஆகியோர் துவக்கி வைத்தனர். முதல் போட்டியில் காரமடை ஸ்ரீ சக்தி இன்ஜினீயரிங் கல்லுாரி அணியும், ஊட்டி சி.எஸ்.ஐ. இன்ஜினீயரிங் கல்லுாரி அணியும் மோதியது. பரபரப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய சக்தி கல்லுாரி அணி வீரர்கள் 32-24 என்ற புள்ளி கணக்கில் சி.எஸ்.ஐ. கல்லுாரி அணியை வென்றனர். இரண்டாம் ஆட்டத்தில் பி.பி.ஜி. ஐ.டி. கல்லுாரி அணியும், அண்ணா பல்கலை மண்டல மைய அணியும் மோதியது. இரு அணி வீரர்களும் திறமையான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். ஆக்ரோஷமாக விளையாடிய அண்ணா பல்கலை அணி வீரர்கள் 45 புள்ளிகளை குவித்தனர். வெற்றி முனைப்புடன் விளையாடிய பி.பி.ஜி. கல்லுாரி அணியினர் 34 புள்ளிகள் எடுத்து தோல்வியை தழுவினர்.