திற்பரப்பு அருவியில் குளிக்க தடை | Pechiparai Dam Surplus water released for 3rd day
கன்னியாகுமரி மாவட்டத்தில் தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது. இன்று காலை நிலவரப்படி முள்ளங்கானவிளை பகுதியில் அதிக பட்சமாக 66.8 மில்லி மீட்டர் மழையளவு பதிவானது. 48 அடி உயரம் கொண்ட பேச்சிபாறை அணை 45.07 அடியை எட்டியது. இதையடுத்து மூன்றாவது நாளாக உபரி நீர் வினாடிக்கு 1046 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. 77 அடி உயரம் கொண்ட பெருஞ்சாணி அணை 49.45 அடியை எட்டியது. 18 அடி உயரம் கொண்ட முதல் சிற்றார் அணை 11.61 அடியாகவும், 16 அடி உயரம் கொண்ட இரண்டாவது சிற்றார் அணை 11.71 அடியாகவும் உயர்ந்தது. வெள்ள பெருக்கு காரணமாக மூன்றாவது நாளாக திற்பரப்பு அருவியில் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. தாமிரபரணி ஆற்றில் வெள்ளம் கரை புரண்டு ஓடுவதால் கரையோர பகுதியில் வசிப்போர் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல நீர்வளத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.