கரூர் கலெக்டரிடம் முறையீடு | Affected sugarcane farmers | Karur
கரூர் மாவட்டத்தில் நொய்யல் தொடங்கி வீரராக்கியம் வரை காவிரி ஆற்றை ஒட்டிய கிராமங்களில் சுமார் 400 ஏக்கரில் கரும்பு பயிரிடப்பட்டுள்ளது. இங்கு விளைவிக்கின்ற கரும்புகளை புகழூரில் உள்ள ஈ.ஐ.டி. பாரி சர்க்கரை ஆலைக்கு அனுப்புவது வழக்கம். கடந்த 3 ஆண்டுகளாக கரும்பில் மஞ்சள் இலை நோய் தாக்கம் அதிகம் தென்படுகிறது. இதனால் கரும்பு விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளது. ஆண்டு தோறும் ஏக்கருக்கு 40 டன் முதல் 50 டன் வரை கரும்புகள் அறுவடை செய்வது வழக்கம். நோய் தாக்கத்தால் ஏக்கருக்கு 1 டன் கூட அறுவடை செய்ய முடியாத நிலையில் விவசாயிகளுக்கு கடும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. கரும்பு விவசாயிகள் அனைவரும் ஈ.ஐ.டி பாரிக்கு பதிவு செய்யும் போதே காப்பீடு செய்யப்படுகிறது. ஆனால் ஈ.ஐ.டி பாரி சர்க்கரை ஆலை நிர்வாகம் முழுமையாக விவசாயிகளுக்கு காப்பீட்டு தொகை வழங்குவது இல்லை. தமிழக அரசு உடனடியாக காப்பீடு செய்தவர்களுக்கு ஏக்கருக்கு 50 ஆயிரம் ரூபாய், காப்பீடு செய்யாதவர்களுக்கு 25 ஆயிரம் ரூபாய் நஷ்டஈடு வழங்க வேண்டும். இக்கோரிக்கையை வலியுறுத்தி கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் கரூர் மாவட்ட செயலாளர் மூர்த்தி தலைமையில் விவசாயிகள் நோய் பாதிக்கப்பட்ட கரும்புடன் பொறுப்பு கலெக்டர் கண்ணனை சந்தித்து மனு அளித்தனர்.