அஜித் லாக்அப் கொலை வழக்கில் தொடரும் மர்மங்கள் | Ajith lockup death case| Madurai
அஜித் லாக்அப் கொலை வழக்கில் தொடரும் மர்மங்கள் / Ajith lockup death case/ Madurai மடப்புரம் காளியம்மன் கோயில் காவலர் அஜித்குமார் நகை திருட்டு வழக்கில் அநியாயமாக போலீஸ் கஸ்டடியில் கொல்லப்பட்ட துயர சம்பவம் தமிழகத்தையே உலுக்கிப் போட்டது. இவ்வழக்கின் காரண கர்த்தாவாகிய புகார்தாரர் நிகிதா குறித்து பல திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது. மதுரை திருமங்கலம் ஆலம்பட்டியை சேர்ந்தவர் முனைவர் நிகிதா. திண்டுக்கல் அரசு மகளிர் கலைக் கல்லூரி பேராசிரியை. நிகிதா மீது பல மோசடி புகார் வழக்கு நிலுவையில் உள்ளது. தனது குடும்பத்தினருடன் கூட்டு சேர்ந்து அரசு வேலை வாங்கி தருவதாக 16 லட்சம் ரூபாய் வரை பலரிடம் பணம் பறித்துள்ளார் நிகிதா. 2011ம் ஆண்டு திருமங்கலம் தாலுகா போலீஸ் ஸ்டேஷனில் நிகிதா , அவரது தந்தை ஜெயபெருமாள், தாய் சிவகாமி , அண்ணன் கவியரசு உள்ளிட்ட 6 பேர் மீது பண மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், தனது வீட்டை தனியார் கல்லூரி நிர்வாக மேலாளரான பாசில் என்பவருக்கு 70 லட்சத்திற்கு விற்பனை செய்ய நிகிதா முயன்றார் . முதற்கட்டமாக, பாசில் 25 லட்சம் ரூபாயை நிகிதாவிடம் கொடுத்துள்ளார். அதை பெற்றுக்கொண்ட நிகிதா , வீட்டின் விலையை உயர்த்தி, கூடுதல் பணம் கேட்டுள்ளார் . ஆனால் பாசில் ஒப்புக்கொள்ளவில்லை. தான் கொடுத்த 25 லட்சம் முன் பணத்தை திரும்ப கேட்டுள்ளார். பணத்தை கொடுக்காமல் நிகிதா எஸ்கேப் ஆனார். இதுதொடர்பாக , பாசில் ஆலம்பட்டி போலீசாரிடம் புகார் கொடுத்தார். விசாரித்த போலீசார், நிகிதா விற்க முயன்று வீட்டு பத்திரத்தை, மதுரை வங்கியில் அடமானம் வைத்து 50 லட்சம் ரூபாய் வாங்கியிருந்தது உறுதியானது. இது தவிர , மதுரை செக்கானூரணி தேங்கல்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் செல்வம் . இவரிடம் அரசு வேலை வாங்கி தருவதாக கூறி 25 லட்சம் ரூபாய் பண மோசடியில் ஈடுபட்டுள்ளார் நிகிதா . 2010ம் ஆண்டு, துணை முதல்வரின் உதவியாளரை தனக்கு தெரியும் என்று பல கட்டமாக நிதி மோசடியில் ஈடுபட்டதாக திருமங்கலம் ஸ்டேஷனில் இரண்டு வழக்கு நிலுவையில் உள்ளது. இதுகுறித்து பாதிக்கப்பட்டவர்கள் புகார் கொடுத்து பணத்தை திருப்பி கேட்ட போது , நிகிதா குடும்பத்தினர் பாதிக்கப்பட்டவர்களுக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். தந்தை இறந்த நிலையில் ,தற்போது தாயார் சிவகாமியுடன் நிகிதா வசித்து வருகிறார். சம்பவம் நடந்த அன்று, நிகிதா தனது தாய் சிவகாமிக்கு ஸ்கேன் எடுக்க திருமங்கலத்தில் உள்ள ஸ்கேன் சென்டருக்கு சென்றுள்ளார். அப்போது நகையை கழட்டி பேக்கில் வைத்ததாக கூறப்படுகிறது. ஆனால் சிவகாமிக்கு ஸ்கேன் எடுக்கவில்லை . ஸ்கேன் சென்டரில் இருந்து 40 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் மடப்புரம் கோயிலுக்கு காரில் சென்ற நிகிதா , அஜித்திடம் கார் சாவியை கொடுத்து பார்க்கிங் செய்ய சொல்லியிருக்கிறார் . திரும்பி வந்த போது , காரில் இருந்த 9 பவுன் நகை திருடு போனதாக கூறினார். காரை பார்க்கிங் செய்த அஜித் தான் நகையை திருடி இருக்க வேண்டும் என போலீசில் புகார் கொடுத்தார் . அடுக்கடுக்கான மோசடி வழக்கில் முக்கிய குற்றவாளி என்ற பெருமைக்குரியவர் நிகிதா . இவரது புகாரின் உண்மைத்தன்மையை ஆராயாமல் , முரட்டுத்தனமாக போலீசார் விசாரித்ததில் அஜித் என்ற அப்பாவி இளைஞர் உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது . அரசியல் மற்றும் அதிகார பின்புலத்தை துஷ்பிரயோகப்படுத்தி அப்பாவி மக்கள் சித்திரவதை செய்யப்படுவது இதுவே இறுதியாக இருக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.