மதுரை பெரியார் பஸ் ஸ்டாண்ட் கடை ஏலத்தை புறக்கணித்த வியாபாரிகள்
மதுரை பெரியார் பஸ் ஸ்டாண்ட் கடை ஏலத்தை புறக்கணித்த வியாபாரிகள் | Madurai | Anger among 446 traders who boycotted the Periyar Bus Stand shop auction மதுரை பெரியார் பஸ் ஸ்டாண்ட் வளாகத்தில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் 119 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டுள்ள புதிய வணிக வளாகக் கட்டடத்தில் 474 கடைகள் உள்ளது. பழைய பஸ் ஸ்டாண்ட் செயல்பட்ட போது கடை வைத்திருந்த 446 வியாபாரிகளுக்கு கடைகளில் முன்னுரிமை வழங்கப்படும் என மதுரை மாநகராட்சி முன்பு அறிவித்திருந்தது. ஆனால் தரைத்தளத்தில் உள்ள 272 கடைகளுக்கு மட்டுமே குலுக்கல் முறையில் ஒதுக்கீடு செய்ய ஏற்பாடுகள் நடக்கிறது. மீதமுள்ள 150க்கும் மேற்பட்ட பழைய வியாபாரிகளின் நிலை குறித்து மாநகராட்சி அறிவிப்பு வெளியிடவில்லை. கடந்த 8 ஆண்டுகளாக முன்பணம் மற்றும் வாடகை செலுத்தி காத்திருக்கும் தங்களுக்கு முன்னுரிமை வழங்கவில்லை. சிலருக்கு மட்டும் குலுக்கல் முறையில் கடைகள் வழங்கப்படுவது ஏற்றுக்கொள்ள முடியாது என வியாபாரிகள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் இறங்கினர். வணிக வளாகத்தின் 4 தளங்களில் தரைத்தளத்தில் உள்ள கடைகள் மட்டுமே ஒதுக்கப்படுகின்றன. மேல்தளங்களில் உள்ள கடைகள் குறித்து எந்த அறிவிப்பும் வெளியிடாதது வியாபாரிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காற்றோட்டம் குறைவான பாதாளத் தளத்தில் மட்டுமே கடைகள் வழங்கப்படுவது வியாபாரிகளை புறக்கணிக்கும் முயற்சி என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அனைவருக்கும் கடை ஒதுக்கீடு உறுதி செய்யப்பட்ட பின்னரே குலுக்கலில் பங்கேற்போம் எனக்கூறி 446 வியாபாரிகளும் குலுக்கல் முறையை புறக்கணித்தனர்.