உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / மதுரை / தங்கக்குதிரை வாகனத்தில் நாளை அதிகாலை 5.45 மணிக்கு கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருள்கிறார்

தங்கக்குதிரை வாகனத்தில் நாளை அதிகாலை 5.45 மணிக்கு கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருள்கிறார்

தங்கக்குதிரை வாகனத்தில் நாளை அதிகாலை 5.45 மணிக்கு கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருள்கிறார் / Madurai / Devotees welcome Kallazhagar who arrived in Madurai மதுரை அழகர்கோயில் சித்திரைத் திருவிழா கடந்த 8ம் தேதி கொடியேற்றத்துடன் கோலாகலமாக துவங்கியது. விழாவையொட்டி கோயில் திருக்கல்யாணம் மண்டபத்தில் சுந்தரராஜப் பெருமாள் சுவாமி தினமும் பல்வேறு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார் விழாவின் ஒரு பகுதியாக மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் கொடுக்கவும், ஆண்டாள் சூடிக்கொடுத்த திருமாலையை ஏற்றுக்கொள்ளவும், வைகை ஆற்றில் இறங்கவும் மதுரையம்பதிக்கு சுந்தரராஜப் பெருமாள் கள்ளழகர் திருக்கோலத்தில் புறப்படும் வைபவம் நேற்று மாலை வெகு விமர்சையாக நடைபெற்றது. இதற்காக அழகர்கோவிலில் இருந்து நேற்று மாலை கொண்டப்பநாயக்கர் மண்டபத்துக்கு கண்டாங்கி பட்டுடுத்தி, கையில் சங்கு, சக்கரம், நேரிக்கம்பு, வளைதடியுடன் கள்ளழகர் திருக்கோலத்தில் அலங்கரிக்கப்பட்ட தங்கப்பல்லக்கில் சுந்தரராஜப் பெருமாள் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார். தொடர்ந்து பதினெட்டாம் படி கருப்பணசாமி கோயில் முன்பு கள்ளழகருக்கு சிறப்பு பூஜை, தீபாராதனை நடந்தப்பட்டு மேளதாளம் முழங்க தீவட்டி பரிவாரங்களுடன் அதிர்வேட்டு முழங்க கள்ளழகர் தங்கப்பல்லக்கில் பல்லாயிரக்கணக்கான பக்தர்களின் கோவிந்தா கோஷம் விண்ணை முட்ட மதுரையை நோக்கி புறப்பட்டார். செல்லும் வழியில் உள்ள பொய்கரைப்பட்டி, கள்ளந்திரி, அப்பன்திருப்பதி, சுந்தரராஜன்பட்டி, கடச்சனேந்தல் வழியாக வைகைக்கரை வரை உள்ள 494 மண்டபங்களில் கள்ளழகர் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி தருகிறார். மண்டகப்படிகளில் எழுந்தருளிய கள்ளழகர் இன்று காலை மூன்று மாவடி பகுதியில் பிரவேசித்தார். கள்ளழகரை பக்தர்கள் எதிர்கொண்டு சர்க்கரை தீபம் ஏற்றி அழைக்கும் எதிர் சேவை நிகழ்ச்சி வெகு விமர்சையாக நடைபெற்றது. கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் விழா நாளை அதிகாலை 05.45 மணிக்கு மேல் 06.05 மணிக்குள் கோலாகலமாக நடைபெறுகிறது. விழாவையொட்டி வைகை அணையில் இருந்து வினாடிக்கு 1000 கன அடி நீர் ஆற்றில் திறந்து விடப்பட்டது. திருவிழாவில் தமிழகம் மட்டுமல்லாது அண்டை மாநிலங்கள் மற்றும் வெளிநாட்டினர் என பத்து லட்சம் பேருக்கும் அதிகமானோர் கூடுவர் என எதிர்பார்க்கப்படுகிறது. பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை மாவட்ட நிர்வாகம், மாநகராட்சி இணைந்து மேற்கொண்டுள்ளது. அழகர் ஆற்றில் இறங்கும் பகுதியில் மட்டும் குதிரைப்படை, மோப்ப நாய்களுடன் மூவாயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். சித்திரை திருவிழாவின் முத்திரை பதிக்கும் திருவிழாவான கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் விழாவையொட்டி நாளை உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

மே 11, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை