தேர்தல் பறக்கும்படை கெடுபிடியால் விவசாயிகள், வியாபாரிகள் கவலை | Election flying squad Strictly
மதுரை மாவட்டம் மேலூர் சந்தைப்பேட்டையில் ஞாயிறு மற்றும் திங்கட்கிழமை கால்நடை வாரச்சந்தை நடக்கிறது. இன்று நடந்த சந்தையில் மேலூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் ஆடுகள் மற்றும் கோழிகளை விற்பனைக்காக கொண்டு வந்தனர். ஆடுகள், கோழிகளை வாங்க பல்வேறு மாவட்டங்கள் மற்றும் கேரளா உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமான வியாபாரிகள் குவிந்தனர். ஆட்டின் விலை எடையைப் பொறுத்து 8000 முதல் 12 ஆயிரம் ரூபாய் வரை விற்பனையானது. கிடாயின் விலை 20 ஆயிரம் முதல் 30 ஆயிரம் வரை சேல்ஸ் ஆனது. ரம்ஜான் நெருங்குவதையொட்டி 2 கோடி ரூபாய் வரை ஆடுகள் விற்று தீர்த்தன. தேர்தல் விதிமுறைகள் நடைமுறையில் உள்ளதால் வெளி மாவட்ட மற்றும் மாநில வியாபாரிகள் பெருமளவில் பணம் கொண்டு வர முடியாததால் வியாபாரம் சோபிக்கவில்லை என வர்த்தகர்கள் கூறினர். வியாபாரிகள் ஆடுகளை வாங்கும்போது அட்வான்ஸ் தொகையை மட்டும் செலுத்தி விட்டு மீதி பணத்தை ஜி பே (G Pay) மூலம் பண பரிவர்த்தனை செய்தனர்.