கூடுதல் வரி விதிப்பை ரத்து செய்ய தமிழ்நாடு உணவுப்பொருள் வியாபாரிகள் சங்கம் வலியுறுத்தல்
கூடுதல் வரி விதிப்பை ரத்து செய்ய தமிழ்நாடு உணவுப்பொருள் வியாபாரிகள் சங்கம் வலியுறுத்தல் | Request to reduce GST on exempted items | TN Food Grains Merchants Association |Madurai ஜி.எஸ்.டி. வரி வருவாய் அதிகரித்துள்ள நிலையில் விடுபட்ட பொருட்களுக்கான வரியை குறைக்க வேண்டும் என தமிழ்நாடு உணவுப்பொருள் வியாபாரிகள் சங்கம் வலியுறுத்தியது. இதுகுறித்து சங்கத் தலைவர் வேல்சங்கர், கவுரவ செயலாளர் சாய் சுப்ரமணியம், கவுரவ ஆலோசகர் ஜெயப் பிரகாசம் கூறியதாவது: 2025 செப்டம்பர் 3 ல் நடந்த ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்தில் பல்வேறு பொருட்கள், சேவைகளுக்கு வரிச்சலுகை, வரிக்குறைப்பு அறிவிக்கப்பட்டன. சில பொருட்களின் வரி விகிதம் அதிகமாக இருப்பதால் தயாரிப்புத் தொழிலும், அது தொடர்பான வர்த்தகமும் முடங்கியுள்ளது. மூலப்பொருளான காகிதத்திற்கான வரியை 18 சதவீதமாக அறிவித்து காகிதப் பொருட்களுக்கான வரியை 5 சதவீதம் குறைத்துள்ளனர். குறிப்பேடுகள், பதிவேடு, டைரி, கம்ப்யூட்டர் எழுது பொருட்கள், காலண்டர், காகிதப்பை தயாரித்து விற்கப்படும் போது 5 சதவீத வரி மட்டுமே செலுத்தப்படுகிறது. இதனால் தமிழகத்தில் 25 ஆயிரம் யூனிட் நிறுவனங்களின் ஐ.டி.சி என்ற உள்ளீட்டு வரி வடிவத்தில் மூலதனம் முடக்கப்பட்டுள்ளதால் தொழிலைத் தொடர முடியாத நிலையில் உள்ளனர். உடனடியாக இந்த வரிவிகிதத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும். களிமண், செங்கல், கற்பூரத்தை கையாளுபவர்கள் இந்தப் பொருட்களின் அதிக வரி விகிதத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். அரிசி, பருப்பு, மாவு, கோதுமை, தினை, கரும்பு வெல்லம், பனை வெல்லம் ஆகியவை 25 கிலோவிற்கு குறைவாக பேக்கிங் செய்யப்பட்டால் வரி விதிப்பும் 25 கிலோவிற்கு மேல் பேக்கிங் செய்தால் வரிவிலக்கு அளிக்கப்படுகிறது. அத்தியாவசிய உணவுப் பொருட்களை எத்தனை கிலோ பேக்கிங் செய்தாலும் வரிவிலக்கு அளிக்க வேண்டும். பூஜை கற்பூரத்திற்கான 18 சதவீத வரியை 5 சதவீதமாக குறைக்க வேண்டும். ஈர இட்லிமாவிற்கு விதிக்கப்பட்ட 5 சதவீத வரியை நீக்கி விலக்கு அளிக்க வேண்டும். ஜி.எஸ்.டி. சீர்திருத்தத்தின் போது சில வகை உரங்கள், பூச்சிக்கொல்லிகள் விடுபட்டுள்ளன. இவற்றுக்கும் 5 சதவீதமே வரி விதிக்கவேண்டும். விடுபட்ட பொருட்களுக்கான வரியை சீரமைத்தால் உற்பத்தியாளர்கள், வர்த்தகர்கள், பொதுமக்கள் பயனடைவர் என்றனர்.