ஆக்கிரமிப்புக்கள் அகற்ற NH அதிரடி நடவடிக்கை | Koripalayam bridge work is speeding | NH | Madurai
மதுரை மாநகரின் கோரிப்பாளையம் பகுதியில் நீடிக்கும் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காணும் வகையில் 190 கோடி ரூபாய் மதிப்பில் மேம்பாலம் கட்டப்படுகிறது. இந்த மேம்பாலம் தமுக்கம் மைதானம் முன்பிலிருந்து தொடங்கி கோரிப்பாளையம் வழியாக ஏவி மேம்பாலத்துக்கு இணையாக மீனாட்சி கல்லூரி - சிம்மக்கல் வரை 2 கிலோ மீட்டர் தொலைவுக்கு அமைக்கப்படும். இந்த பாலத்தில் செல்லூரை நோக்கி செல்லும் பாலம் ஸ்டேஷன் சாலையில் மட்டும் ஒரு இணைப்பு பாலம் கட்டப்படும். அதுபோல் அதன் இடதுபுறம் அரசு ஆஸ்பிடல் - பனகல் சாலையில் மற்றொரு இணைப்பு பாலம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை இருந்தது. இந்த சாலையில் இணைப்பு பாலம் அமைத்தால் ஆஸ்பிடல் செல்லும் ஆம்புலன்ஸ்கள் உள்ளிட்ட மற்ற வாகனங்களால் நெரிசல் ஏற்படும். இதற்கு மாற்று ஏற்பாடாக பனகல் சாலையில் அமெரிக்கன் கல்லூரியை ஓட்டி உள்ள நடைபாதையை அகற்றி சாலையை 10 மீட்டருக்கு அகலப்படுத்தி விசாலமான சாலையாக மாற்ற நெடுஞ்சாலைத்துறை திட்டமிட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக தல்லாகுளம் மாநகராட்சி எக்கோ பார்க் டு தமுக்கம் வரை 1 கிலோ மீட்டர் துாரம் 22 மீட்டர் அகலத்துக்கு சாலையை விரிவாக்கம் செய்ய நெடுஞ்சாலைத்துறை துரித நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்காக இச்சாலையின் இருபுறமும் புறம்போக்கு இடங்களில் வீடுகள், கடைகள், காம்ப்ளக்ஸ் கட்டி பலர் ஆண்டாண்டு காலமாக ஆக்கிரமித்து அனுபவித்து வருகின்றனர். ஆக்கிரமிப்பாளர்கள் தாங்களாகவே முன் வந்து வெளியேற வேண்டும். தாமதம் செய்தால் நெடுஞ்சாலைத்துறை ஆக்கிரமிப்புக்களை அகற்றும். அதற்கான செலவு தொகையை ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து வசூலிக்கப்படும். ஆக்கிரமிப்பு பகுதியில் உள்ள பொருட்களை நெடுஞ்சாலைத்துறை பறிமுதல் செய்யும் என எச்சரிக்கை செய்து ஆக்கிரமிப்பாளர்களுக்கு நெடுஞ்சாலைத்துறை நோட்டீஸ் அனுப்பியது. இதுகுறித்து மதுரை கோட்ட நெடுஞ்சாலைத்துறை அதிகாரி கூறுகையில், மேம்பாலம் பணிகள் இரண்டு ஆண்டுகளில் முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதன்படி 2025 ம் ஆண்டு டிசம்பரில் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது, என்றார். அதிகாரிகள் கூறுவதை போல் இப்பணிகள் திட்டமிடப்படி முடிந்தால் 2026 ம் ஆண்டு தொடக்கத்தில் மேம்பாலம் போக்குவரத்து பயன்பாட்டிற்காக திறக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.