₹1.20 கோடி கால்வாய் வீணானது | Confluence of waste in Mariamman Theppakulam | Madurai
₹1.20 கோடி கால்வாய் வீணானது / Confluence of waste in Mariamman Theppakulam / Madurai உலகப் புகழ் பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோயிலின் உப கோயிலான வண்டியூர் மாரியம்மன் கோயில் தெப்பக்குளம் தற்போது உள்ளூர் மக்களுக்கு முக்கிய பொழுதுப்போக்கு இடமாக திகழ்கிறது. கடந்த காலத்தில் ஏராளமான சினிமா திரைப்படங்கள் எடுக்கப்பட்டதால் இந்த தெப்பக்குளம் சுற்றுலாத் தலமாக புகழ்பெறத் தொடங்கியது. இடைப்பட்ட காலத்தில் தண்ணீர் வரத்து இல்லாமல் கடந்த காலங்களில் தெப்பக்குளம் நிரந்தரமாக வறட்சிக்கு இலக்கானது. இளைஞர்கள், மாணவர்கள் விளையாடும் மைதானமாகவும், ஆடு, மாடுகளுடைய மேய்ச்சல் நிலமாகவும் மாறியது. அதனால், இந்த தெப்பக்குளத்தின் அழகும், அதன் பராம்பரிய தோற்றமும் மாறியது. கடந்த அதிமுக ஆட்சியில் மதுரை மாநகராட்சி சார்பில் வைகை ஆற்றில் இருந்து இந்த தெப்பக்குளத்திற்கு தண்ணீர் கொண்டு வருவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதையடுத்து தெப்பக்குளத்தின் பழைய கால்வாய்கள் ஆக்கிரமிப்பு எடுக்கப்பட்டு தூர்வாரப்பட்டது. வைகை ஆற்றில் தண்ணீர் வரும்போதெல்லாம் தெப்பக்குளத்துக்கு நேரடியாக தண்ணீர் வருவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இதற்காக கல்பாலம் அருகே ஒரு கோடியே 20 லட்சம் ரூபாய் மதிப்பில் தடுப்பணை அமைத்து வைகை நீர் பிரதான கால்வாய் வழியாக தெப்பக்குளம் சென்றடைந்தது. அதனால் தெப்பக்குளம் ஆண்டு முழுவதும் தண்ணீர் நிரம்பி ரம்மியமாக காட்சியளித்தது. உள்ளூர் மக்கள், சுற்றுலாப்பயணிகள் தெப்பக்குளத்தின் அழகை கண்டு ரசிக்கும் வகையில் படகுப்போக்குவரத்து விடப்பட்டது. தற்போது மதுரை வைகை ஆற்றில் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டு தண்ணீர் ஆர்ப்பரித்து செல்கிறது. ஆனால், வைகை ஆற்றில் இருந்து வண்டியூர் மாரியம்மன் கோயில் தெப்பக்குளத்திற்கு தண்ணீர் வரவில்லை. தெப்பக்குளம் செல்லும் கால்வாய் குடியிருப்பு பகுதிகள் மற்றும் இறைச்சிக் கடைகள் நிரம்பிய பகுதிகள் வழியாக செல்வதால் டாய்லெட் கழிவுகள் மற்றும் இறைச்சிக் கழிவுகள் கால்வாயில் நேரடியாக கலக்கிறது. இந்த தண்ணீர் தெப்பக்குளம் பகுதியில் சல்லடை மூலம் குப்பைகளை அகற்றி தண்ணீர் மட்டும் தெப்பத்தை அடையும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. குப்பைகள் அகற்றப்பட்டாலும் மாசடைந்த கழிவு நீரை சுத்திகரிக்காமல் நேரடியாக தெப்பத்தில் விடுவதால் தண்ணீர் நிறம் மாறி துர்நாற்றம் விஷத்தன்மையுடன் தெப்பத்தில் நேரடியாக கலக்கிறது. உலகப் புகழ் பெற்ற வண்டியூர் மாரியம்மன் தெப்பக்குளத்தின் புனிதம் காக்கவும், தெப்பத்தில் சுத்தமான தண்ணீரை சுகாதாரத்துடன் நிரப்ப வேண்டும் என பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர். ஆண்டு முழுவதும் தெப்பத்தில் தண்ணீர் நிரம்பி இருப்பதால் சுற்று வட்டாரப் பகுதிகளில் நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்து தண்ணீர் பிரச்சனைக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. வைகை அணையில் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ள நிலையில் தெப்பத்தில் வைகை நீர் மாசடையாமல் சென்றடைய மாவட்ட நிர்வாகம், மாநகராட்சி மற்றும் இந்து அறநிலையத்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தினர்.