தொழில் போட்டி காரணமா? என விசாரணை | Madurai | Madurai BJP executive murder
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி கீழ வல்லானந்தபுரத்தை சேர்ந்தவர் சக்திவேல் வயது 35. அரிசி வியாபாரி. மதுரை அண்ணாநகரில் வசித்து வருகிறார். மதுரை மாவட்ட பாஜ ஓபிசி அணி மாவட்ட செயலாளராக இருந்தார். இன்று காலை சக்திவேல் வீட்டில் இருந்து வண்டியூர் சங்குநகரில் உள்ள அரிசி குடோனுக்கு பைக்கில் சென்றார். அவரை மற்றொரு பைக்கில் மர்ம ஆசாமிகள் மூவர் விரட்டிச் சென்றனர். கும்பலிடம் இருந்து தப்பிக்க சங்குநகர் மெயின் ரோட்டில் சக்திவேல் பைக்கில் வேகமாக சென்றார். அவரை வழிமறித்த ஆசாமிகள் ஓட ஓட விரட்டி அரிவாளால் சரிமாரியாக வெட்டிப் படுகொலை செய்து தப்பினர். ரத்த வெள்ளத்தில் சரிந்த சக்திவேல் ஸ்பாட்டிலேயே பலியானார். அண்ணாநகர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பிடலுக்கு அனுப்பினர். அப்பகுதியில் இருந்த சிசிடிவி கேமிரா பதிவுகளை கைப்பற்றி விசாரிக்கின்றனர். தனிப்படை அமைத்து கொலையாளிகளை தேடுகின்றனர். மதுரையில் பாஜக பிரமுகர் படுகொலையான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.