கடத்தலுக்கு மூளையாக செயல்பட்டவர் எஸ்கேப் | Neomax Case | Madurai
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையை சேர்ந்தவர் கார்த்திகேயன், வயது 45/. இவர் மதுரை நியோமேக்ஸ் நிறுவன நிர்வாகி. நேற்று முன்தினம் மதுரையில் இருந்து காரில் நாமக்கல் சென்றார். வாடிப்பட்டி அருகே மற்றொரு காரில் வந்த நியோமேக்ஸ் விற்பனை மேலாளர், திருச்சியை சேர்ந்த பசுபதி உள்ளிட்டோர் கார்த்திகேயனை கடத்தினர். இந்த கடத்தல் வழக்கில் பணப் பேரம் பேசி கை மாறியதும் கார்த்திகேயனை திண்டுக்கல்லில் இறக்கி விட்டனர். திண்டுக்கல் நகர் பகுதியில் போலீசை பார்த்ததும் மதுபோதையில் தப்பிக்க முயன்று அடுத்தடுத்த செக் போஸ்ட்கள், வாகனங்களில் இடித்து நிற்காமல் சாணார்பட்டி மலைப்பகுதிக்குள் சென்றபோது கிராமமக்களிடம் பசுபதி சிக்கினார். கடத்தல் தொடர்பாக வாடிப்பட்டி போலீசார் திருச்சி பசுபதி, வயது 29, முத்துக்குமார், வயது 31, கார்த்திக், வயது 30, வீரகணேசன், வயது 30 மற்றும் ஆனந்தகுமார், வயது 25, ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 3 லட்சம் ரூபாய், காரை பறிமுதல் செய்தனர். போலீசார் கூறுகையில், இதில் பசுபதி நியோமேக்ஸ் நிறுவனத்தில் தேவா என்பவர் மூலம் 8 லட்சம் ரூபாயும், சிலரை டெபாசிட் செய்யவும் வைத்துள்ளார். அந்நிறுவனம் முடங்கியதால் முக்கிய நிர்வாகியை கடத்தினால் பணம் பெறலாம் என கூறிய தேவா கடத்தலுக்கு மூளையாக இருந்துள்ளார். தேவா கைதுக்கு பின் தான் எவ்வளவு பணம் கைமாறியது என தெரியவரும் என்றனர்.