மதுரை மேலுாரில் 48 கிராமங்கள் பங்கேற்பு | Tungsten mining | Villageres protest | Madurai
மதுரை மாவட்டம் மேலுார் தாலுகா அரிட்டாபட்டி, நாயக்கர்பட்டி உள்ளிட்ட 11 கிராமங்களை உள்ளடக்கிய பகுதிகளில் 5 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் மலையை வெட்டி டங்ஸ்டன் கனிமம் எடுக்க வேதாந்தா நிறுவனத்தின் துணை நிறுவனமான ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனத்திற்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. இதைக் கண்டித்தும், மத்திய அரசு வழங்கிய உத்தரவை உடனடியாக திரும்பப் பெற வலியுறுத்தி 11 கிராமங்கள் உள்ளடக்கிய 48 கிராம மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக மேலூர் அருகே அ.வல்லாளப்பட்டியில் உள்ள வெள்ளிமலையாண்டி கோயில் முன்பு 48 கிராமத்தைச் சேர்ந்த பிரதிநிதிகள் மற்றும் பெண்கள் உட்பட 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கண்டன பொதுக்கூட்டம் மற்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் மேலூர் அதிமுக எம்எல்ஏ பெரியபுள்ளான், விவசாய சங்கத்தினர் மற்றும் இயற்கை வள பாதுகாப்பு அமைப்பினர் பலர் கலந்துக் கொண்டனர். டங்ஸ்டன் எடுக்க வழங்கப்பட்ட உத்தரவை ரத்து செய்யக்கோரி மேலூரில் முல்லைப் பெரியாறு ஒருபோக பாசன விவசாயிகள் சங்கம் சார்பில் நாளை நடைபெற உள்ள கடையடைப்பு மற்றும் கண்டன ஆர்ப்பட்டத்தில் பெருந்திரளாக கலந்து கொள்வது எனவும் இக்கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.