யானையை காட்டுக்குள் விரட்ட 50 வனக்குழுவினர் தீவிரம்
யானையை காட்டுக்குள் விரட்ட 50 வனக்குழுவினர் தீவிரம் / Elephant Entry / Doddabetta Peak Closure / Ooty ஊட்டியில் பிரபல சுற்றுலா தலமான தொட்டபெட்டா காட்சி முனை பகுதியில் தண்ணீர், உணவு தேடி ஒற்றைக் காட்டு யானை முதல் முறையாக நேற்று மாலை வந்தது. ரோட்டோரம் இருந்த குப்பை தொட்டியில் தும்பிக்கையை விட்டு உணவு தேடியது. குப்பையில் பிளாஸ்டிக் கவரோடு இருந்த கேரட், பீன்ஸ் உள்ளிட்ட காய்கறி கழிவுகளை தின்றது. காட்டு யானை முகாமிட்டதை தொடர்ந்து டூரிஸ்ட்டுகள் உடனடியாக வெளியேற்றப்பட்டனர். யானையை காட்டுக்குள் விரட்டும் பணியில் 50 வனக்குழுவினர் ஈடுபட்டனர். யானை நடமாட்டத்தை ட்ரோன் மூலம் கண்காணித்து விரட்டும் பணியில் வனத்துறையினர் விடிய விடிய ஈடுபட்டனர். தொடர்ந்து ஊட்டி சிட்டிக்குள் நேற்று நள்ளிரவு ஒற்றை யானை புகுந்தது. யானையை வனத்துறையினர் காட்டுக்குள் விரட்டியடித்தனர். இதனால் யானை மீண்டும் தொட்டபெட்டா மலைச்சிகர வனத்திற்குள் புகுந்தது. பாதுகாப்பு கருதி தொட்டபெட்டா காட்சி முனை இன்று ஒரு நாள் மூடப்பட்டது. கோடை சீசன் துவங்கியுள்ள நிலையில் இன்று காலை முதலே தொட்டபெட்டா காட்சி முனையை காண ஏராளமான சுற்றுலா குவிந்தனர். சுற்றுலா பயணிகளின் வாகனங்களை வனத்துறையினர் திருப்பி அனுப்பியதால் தொட்டபெட்டா காட்சி முனையை காண ஆர்வத்துடன் வந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர். யானை நடமாட்டம் உள்ளதால் தொட்டபெட்டா, டீ பார்க், டீ மியூசியம், சாக்லேட் ஃபேக்டரி இன்று மூடப்பட்டது.