95 கிலோ இள வட்டக்கல் துாக்கிய தோடர் இளைஞர்கள் | Festival of the Todar Tribal People | Ooty
95 கிலோ இள வட்டக்கல் துாக்கிய தோடர் இளைஞர்கள் | Festival of the Todar Tribal People | Ooty நீலகிரி மாவட்டத்தில் மட்டுமே வசித்து வரும் தோடர் பழங்குடியின மக்களின் பாரம்பரிய பண்டிகையான மொற்பர்த் பண்டிகை ஆண்டு தோறும் டிசம்பர் இறுதியில் அல்லது ஜனவரி முதல் வாரத்தில் கொண்டாடப்படுவது வழக்கம். விழாவில் மாவட்டத்தில் உள்ள அனைத்து தோடரின மக்கள் பங்கேற்பர். நடப்பாண்டின் பண்டிகை தோடர் மந்துகள் எனும் தோடர் கிராமங்களின் தலைமையிடமான தலைக்குந்தா அருகே உள்ள முத்தநாடு மந்தில் நடைபெற்றது. இதில் பெரும்பாலான தோடரின மக்கள் பங்கேற்று பழமை வாய்ந்த கோயிலில் சிறப்பு வழிபாடு நடத்தினர். தோடரின ஆண்கள் மட்டும் தங்கள் பாரம்பரிய உடை அணிந்து மண்டியிட்டு வழிபாடு நடத்தினர். பின், கோயிலை சுற்றி தங்கள் பாரம்பரிய நடனத்தை ஆடி பார்வையாளர்களை பரவசப்படுத்தினர். தோடர் இளைஞர்கள், 95 கிலோ எடையுள்ள இளவட்டக் கல்லை துாக்கி தங்களின் வலிமையை நிரூபித்தனர். விழாவில் பங்கேற்றவர்களுக்கு பால், நெய் ஆகியவற்றால் தயாரிக்கப்பட்ட பிரத்யேக பிரசாதம் வழங்கப்பட்டது. உள்ளூர் மக்கள், சுற்றுலா பயணிகள் பங்கேற்றனர். விழா ஏற்பாடுகளை தோடரின நிர்வாகிகள் செய்திருந்தனர். விழாவில் திரளான தோடரின ஆண்கள், சிறுவர்கள் பங்கேற்று சிறப்பித்தனர்.