குன்னூர் நூற்றாண்டு அரசு லாலி மருத்துவமனை புதுப்பொலிவு
குன்னூர் நூற்றாண்டு அரசு லாலி மருத்துவமனை புதுப்பொலிவு | Govt Hospital Renovation | Coonoor | Nilgiris நீலகிரி மாவட்டம் குன்னூரில் நூற்றாண்டு பழமையான அரசு லாலி மருத்துவமனை பாரம்பரியம் மாறாமல் மைக்ரோ லேண்ட் அறக்கட்டளை சார்பில் பல கோடி ரூபாய் மதிப்பில் நவீனப்படுத்தப்பட்டு வருகிறது. கோவிட் காலத்தில் இருந்து இதுவரை 5 கட்டங்களாக இந்த மருத்துவமனையில் டயாலிசிஸ் சிகிச்சை பிரிவு, வெளிநோயாளி பிரிவு, குழந்தைகள் வார்டு, அவசர சிகிச்சை பிரிவு, மகளிர் உள் நோயாளி பிரிவு, மாடர்ன் டாய்லெட், சுடுநீர் வசதி, நர்ஸ் ஹாஸ்டல் உட்பட பல நவீன வசதிகள் செய்யப்பட்டுள்ளன. அதன் ஒரு பகுதியாக 86 லட்சம் ரூபாய் மதிப்பில் 90 நாட்களாக நடந்த உள்நோயாளி பிரிவு ஆண்கள் வார்டு நவீனப்படுத்தும் பணிகள் நிறைவு பெற்று இன்று துவக்க விழா நடந்தது. இதை கலெக்டர் லட்சுமி பவ்யா திறந்து வைத்தார். அவர் பேசுகையில் தமிழக செவிலியர்களின் கவனிப்பு சிறப்பாக இருக்கும் என்பதால் மேற்கு வங்க ம்க்கள் மருத்துவ சிகிச்சைக்காக ரயிலில் வந்ததாக அப்போது என்னிடம் தெரிவித்தனர். கடந்த ஆண்டு இங்கு திறக்கப்பட்ட மகளிர் வார்டு தற்போதும் தூய்மையாக பராமரிக்கப்படுகிறது. சிறப்பாக செயல்படும் செவிலியர்களை செவிலியர் தினத்தில் பெருமைப்படுத்துவது மகிழ்ச்சி அளிக்கிறது. பழமையான அழகான பாரம்பரிய பங்களாவிற்குள் வருவது போன்ற உணர்வு இந்த மருத்துவமனைக்கு வரும்போது ஏற்படுகிறது. இந்த மருத்துவமனை மாவட்ட அளவில் முதலிடம் பிடித்தது. இது தமிழகத்தில் முதன்மை அரசு மருத்துவமனையாக முதலிடம் பிடிக்க வேண்டும், என்றார். மைக்ரோ லேண்ட் அறக்கட்டளை நிர்வாக இயக்குனர் கல்பனா கர் பேசுகையில், நீலகிரியில் அனைவருக்கும் மருத்துவ சேவை கிடைக்க பிற பகுதிகளிலும் மேம்பாட்டு பணிகளுக்கு திட்டமிடப்பட்டுள்ளது என்றார். திட்ட உறுப்பினர் ராதிகா சாஸ்திரி பேசுகையில், கடந்த 2001ம் ஆண்டு 5 டாக்டர்கள் மட்டுமே இருந்த இந்த மருத்துவமனையில் தற்போது 14 டாக்டர்கள் பணியாற்றுகின்றனர், என்றார். விழாவில் சுகாதாரத்துறை இணை இயக்குனர் டாக்டர் ராஜசேகரன், தன்னார்வ குழுவினர் சார்லஸ், ஜான், ஒப்பந்ததாரர் ஸ்ரீனிவாசன், டாக்டர்கள், செவிலியர்கள் மற்றும் பணியாளர்கள் பங்கேற்றனர்.