சுற்றுலா பயணிகளின் கண்களுக்கு விருந்து | Migratory Butterflies | Coonoor
நீலகிரி மாவட்டம் குன்னுார் பர்லியார் முதல் காட்டேரி வரையிலான பகுதிகளில் நீல வரியன் பட்டாம் பூச்சிகள் கூட்டம் கூட்டமாக இடபெயர்ச்சியாகி வருகின்றன. காட்டேரி ரன்னிமேடு அருகே ஆற்றோரம் ஒரு மலர் செடியில் 10 நிமிடங்களில் நுாற்றுக்கும் மேற்பட்ட நீல வரியன் பட்டாம் பூச்சிகள் கூட்டமாக தேன் சுவைக்கும் காட்சி மலை ரயிலில் வரும் சுற்றுலா பயணியரை வசீகரிக்கிறது. தி வின்டர்-பிளைத் அசோசியேஷன் தாவர சூழலியல் மற்றும் பட்டாம்பூச்சி ஆராய்ச்சியாளர் டாக்டர் ஜீவித் கூறுகையில், வடகிழக்கு பருவமழை துவங்குவதற்கு முன்பு, செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் கிழக்கு தொடர்ச்சி மலையில் இருந்து மேற்கு தொடர்ச்சி மலைக்கு பட்டாம்பூச்சிகள் இடம் பெயர்கின்றன. தற்போது குன்னுார் பகுதிகளில் இடபெயர்ச்சியான மில்க்வீட் பட்டாம்பூச்சி குடும்பத்தைச் சேர்ந்த புளூ டைகர் எனும் நீல வரியனின் அறிவியல் பெயர் திருமலா லிம்னியாஸ் என்பதாகும். குன்னுார் பர்லியார், காட்டேரி வழியாக அவலாஞ்சி, சைலன்ட் வேலி பகுதிகளுக்கு செல்லும் இந்த புளூ டைகர், மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் திரும்ப இடம் பெயர்ந்து கேரளா கடல் பகுதி அல்லது இலங்கைக்கு இடம் பெயர்கின்றன, என்றார்.