இயற்கைக்கு நன்றி கூறும் பழங்குடி மக்களின் பூ புத்தரி திருவிழா | Poo Pudhri festival of Tribal people
நீலகிரி மாவட்டம் கூடலூரில் பழங்குடி மக்கள் சார்பில் நெற்பயிர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாக ஆண்டு தோறும் நெல் அறுவடைக்கு முன்பு பாரம்பரிய பூ புத்தரி எனப்படும் கதிர் அறுவடை திருவிழா ஐப்பசி மாதம் 10ம் நாள் கொண்டாடப்படுகிறது. இந்தாண்டு விழா துவக்கமாக நம்பாலக்கோட்டை வேட்டைக்கொருமகன் கோயிலில் கடந்த அக்டோபர் 26ம் தேதி துவங்கியது. தொடர்ந்து பழமையான கோயில்களில் பூ புத்தரி அறுவடை திருவிழா நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக புளியாம்பாறை பகவதி மற்றும் ஆயிரம் வில்லி சிவன் கோயிலில் இவ்விழா நடைபெற்றது. இதையொட்டி இன்று காலை சிறப்பு பூஜைகளுடன் விழா துவங்கியது. தொடர்ந்து கதிர் அறுவடை செய்வதற்காக கோயிலில் இருந்து பக்தர்கள் புளியம்வயல் அருகே உள்ள வயலுக்கு ஊர்வலமாக சென்றனர். அங்கு சிறப்பு பூஜை செய்து நெற்கதிர்கள் அறுவடை செய்யப்பட்டன. அங்கிருந்து செண்டை மேளம் இசையுடன் நெற்கதிர் கட்டுக்களை ஊர்வலமாக கோயிலுக்கு எடுத்து வந்தனர். அங்கு நெற் கதிர்களுக்கு சிறப்பு பூஜை செய்து பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கினர். தொடர்ந்து பக்தர்களுக்கு, அருள் வாக்கு வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. விவசாயிகள் கூறுகையில், கோயிலில் பூஜை செய்து வழங்கப்படும் நெற்கதிர்களை விவசாயிகள் வீட்டில் வைத்து பூஜை செய்வர். பழங்குடியின மக்கள் நெல் அறுவடை செய்வதை பாரம்பரியமாக கடைப்பிடித்து வருகின்றனர் என்றனர்.