சிலம்பம் போட்டியில் சீறும் மானாமதுரை சிங்கங்கள் | silambam practice | students are interested
சிலம்பம் போட்டியில் சீறும் மானாமதுரை சிங்கங்கள் | silambam practice |students are interested | manamadurai | sivagangai சிவகங்கை மாவட்டம் மானாமதுரை பழைய தபால் ஆபீஸ் தெருவை சேர்ந்தவர் சிலம்பம் ஆசிரியர் சீனி. இவர் தனது 103வது வயதில் காலமானார். இவர் இறப்பதற்கு சில நாட்களுக்கு முன்பு வரை தன்னிடம் சிலம்பம் பயின்ற மாணவர்களுக்கு சிலம்பக் கலையை கற்றுக் கொடுத்து வந்தார். தமிழர்களின் பாரம்பரிய கலையான சிலம்பம் கற்று தேர்ந்ததால் தன் வாழ்நாளின் இறுதிவரை எவ்வித நோய், நொடியும் இல்லாமல் தனது பணிகளை தானே செய்து கொண்டு மற்றவர்களுக்கும் சிலம்ப கலையை கற்றுக் கொடுத்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இவரது இறப்பிற்குப் பின்பு இவரது சிஷ்யர்களான செல்வம் மற்றும் முனியாண்டி ஆகியோர் மானாமதுரை பகுதியில் தங்களது குருவான சீனி ஆசான் பெயரில் சிலம்பம் பள்ளியை ஆரம்பித்தனர். தங்களது சிலம்பம் பள்ளியில் 200க்கும் மேற்பட்ட சிறுவர், சிறுமியர், பள்ளி, கல்லுாரி மாணவ, மாணவிகளுக்கு சிலம்பம் கலையை கற்றுக் கொடுத்து வருகின்றனர். இப்பள்ளி வீரர், வீராங்கனைகள் சிலம்பம், வாள், வளரி உள்ளிட்ட பல்வேறு வகையான தற்காப்பு கலைகளை பயின்று மாவட்ட, மாநில அளவிலான போட்டிகளில் பங்கேற்று பரிசுகளை குவித்து வருகின்றனர். சிலம்பத்தில் 72க்கும் மேற்பட்ட வகைகளில் சுற்றும் முறைகள் உள்ளன. அதில் சுருள், கத்தி, பந்தம், அடிவரசு, தொடு புள்ளி, பிச்சுவா, பிடி வரிசை,கோடாலி, கேடயம், வேல் கம்பு முன்வெட்டு, பின்வெட்டு போன்ற பல்வேறு சுற்றும் முறைகள் அடங்கும். சிலம்பாட்டம் கற்றுக்கொள்ள குறைந்தது ஒரு வருடம் தேவைப்படும். ஆர்வத்துடன் கற்றுக் கொள்வோர் எதிர்காலத்தில் மிடுக்கான வீரர்களாக மிளிர்வது உறுதி. சிலம்பம் ஸ்போர்ட்ஸ் கோட்டாவில் அரசு வேலை பெறுவது சுலபம். மேலும் பள்ளி, கல்லூரி மாணவிகள் சிலருக்கு பாலியல் தொந்தரவு ஏற்படுகிற நிலையில் சிலம்பம் தற்காப்புக்கலை அவசியமாக கற்றுக் கொள்வது சாலச்சிறந்தது என்கிறார் சிலம்பம் பயிற்சியாளர் முருகன் மற்றும் முனியாண்டி.