நகையை மீட்டு உறவினர்களிடம் ஒப்படைத்த ரயில்வே போலீஸ்
நகையை மீட்டு உறவினர்களிடம் ஒப்படைத்த ரயில்வே போலீஸ் | Kumbakonam railway police recovered ₹3 lakhs worth jewells in railway station தஞ்சை மாவட்டம் கும்பகோணம் செட்டி மண்டபத்தைச் சேர்ந்தவர் செல்வராஜ். புனேயில் பணியாற்றி வருகிறார். தீபாவளிக்காக சொந்த ஊர் கும்பகோணத்திற்கு குடும்பத்துடன் வந்தார். பண்டிகை முடிந்து கும்பகோணம் ரயில்வே ஸ்டேஷனில் இருந்து இன்று பூனேவுக்கு புறப்பட்டார். தாங்கள் கொண்டு வந்த கைப்பை ரயில்வே ஸ்டேஷன் நடைமேடையிலேயே மறந்து வைத்து விட்டு ரயிலில் ஏறினர். நடைமேடையில் கைப்பை ஒன்று அனாதையாக கிடப்பதைக் கண்ட ரயில்வே போலீசார் அதை மீட்டனர். பையை திறந்து பார்க்கையில் அதில் தங்கம் மற்றும் வெள்ளி நகைகள் இருந்தன. இதுகுறித்து கும்பகோணத்தில் இருந்து கடைசியாக புறப்பட்ட புனே எக்ஸ்பிரஸ் ரயிலின் பாதுகாப்பு அதிகாரிகளுக்கு ரயில்வே போலீசார் தகவல் கூறினர். இதையடுத்து புனே ரயில் பயணிகளிடம் பையை தவற விட்டு சென்றது குறித்து பாதுகாப்பு அதிகாரிகள் தகவல் கூறினர். அப்போது தாங்கள் நடைமேடையில் பையை விட்டு சென்றது குறித்து செல்வராஜ் கூறினார். பையின் அடையாளங்கள் மற்றும் பைக்குள் இருக்கும் நகைகள் குறித்து பாதுகாப்பு அதிகாரிகளிடம் கூறினார். இதுகுறித்து கும்பகோணம் ரயில்வே போலீசாருக்கு பாதுகாப்பு அதிகாரிகள் தகவல் கூறினர். செல்வராஜ் கூறியபடி கும்பகோணத்தை சேர்ந்த அவரது உறவினர் ஒருவரை போலீசார் வரவழைத்து அவரிடம் 3 லட்சம் மதிப்புள்ள நகை மற்றும் வெள்ளி பொருட்கள் இருந்த பையை ஒப்படைத்தனர். செல்வராஜ் கூறியபடி நகை, வெள்ளி பொருட்கள் இருக்கிறதா என்பது உறவினர் சோதனை செய்த பின் பையை பெற்றுச் சென்றார். நகை வைத்திருந்த பையை பத்திரமாக மீட்டு கொடுத்த கும்பகோணம் ரயில்வே எஸ்ஐ செந்தில் வேலன், எஸ்எஸ்ஐகள் ஜெகதீசன், முத்துலட்சுமி, ஏட்டு வெங்கடேசன் ஆகியோருக்கு செல்வராஜ் போனில் நன்றி தெரிவித்தார்.